பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!
`தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் வேண்டாம் எனக் கூறுவது இதனால்தான்..!' - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
“கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. 1951-ல் மக்கள்தொகை கணக்குப்படி ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 7.3 லட்சம் மக்கள்தொகை நிர்ணயிக்கப்பட்டு, அப்போது நாடு முழுவதும் 494 தொகுதிகள் என சீரமைக்கப்பட்டன. அதேபோல், 1961-ல் 522 நாடாளுமன்றத் தொகுதிகளாக மக்கள்தொகை அடிப்படையில் உயர்த்தப்பட்டது. ஒரு தொகுதிக்கு 8.4 லட்சம் என மக்கள்தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதுவே, 1971ல் 10.1 லட்சம் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு மக்கள்தொகை என்ற அடிப்படையில் 543 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்தியதன் விளைவாக மக்கள்தொகையில் எண்ணிக்கை விகிதாச்சாரம் நமக்கு குறைந்துவிட்டது.

அதை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை முக்கியமாக கருதி 1976-ல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஆட்சி இருந்தபோது குடும்பக் கட்டுப்பாடு போன்ற இந்தியாவுக்குரிய சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாக பின்பற்றக்கூடிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்ற காரணத்தினால் 2001 வரை 25 ஆண்டுகளுக்கு அதே தொகுதிகள் இருக்க வேண்டும் என்று அரசியல் திருத்தச் சட்டம் 42 கொண்டுவரப்பட்டது. இது, 2001 ஆம் ஆண்டு வரை 543 தொகுதிகளாக நிலைத்தது. பின்னர், தி.மு.க அங்கம் வகித்த பா.ஜ.க தலைமையிலான ஜனநாயக கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேச்சை ஏற்று மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கட்டும்... ஆனால் தொகுதிகள் எண்ணிக்கையைக் கூட்டாமல், குறைக்காமல் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்து கொள்ளலாம். ஆனால் மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் எண்ணிக்கை குறைக்கவும் கூட்டவோ கூடாது என்று கேட்டுக் கொண்டதன்படி அரசியல் திருத்தச் சட்டம் 84-ன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு... அதாவது வருகின்ற 2026-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத் தொகுதி 543 ஆகத்தான் தொடரும் என்று கொண்டுவரப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக பின்பற்றியதால் தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் போய்விடக் கூடாது என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. நாம் தற்போது 2025-ல் இருக்கின்றோம். அப்போது கொண்டுவரப்பட்ட அரசியல் திருத்தச் சட்டம் 2026 வரை தான் இருக்கும். அதனால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தற்போது உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளையே நீட்டிக்க அரசியல் திருத்தச் சட்டத்தை ஒன்றியத்தில் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு கொண்டு வரப் போகிறார்களா?

2023ம் ஆண்டு மகளிருக்கான சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகிறபோது உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் பிறகு 2031-ல் இருந்து மகளிருக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார். அதனால், நிச்சயமாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திவிட்டு தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரும் என்ற கண்ணோட்டத்திற்காகத்தான் நாங்கள் முன்வைக்கின்றோம். தற்போது, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் 23.74 சதவீதமாக இருக்கிறது. இதே 543 தொடர்ந்தால் இதே நிலை இருக்கும். இதே 543 தொகுதிகளை வைத்துக்கொண்டு மக்கள்தொகை அடிப்படையில் 543 தொகுதிகளுக்கு மறுவரையரை செய்கின்றபோது நமது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 18.97 சதவிகிதமாக குறையும். அதே நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திவிட்டு மக்களவையில் எண்ணிக்கைகளை கூட்டினால் 848 தொகுதிகள் வருகின்றன. அப்படி, வருகின்றபோது தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் அதிகம் கிடைக்கும் என்றாலும், தென் மாநிலங்களின் மக்களவையின் பங்களிப்பு 19.34 சதவிகிதமாகத்தான் இருக்கிறது.

அதனால், மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களது தலையாய கோரிக்கை. உத்தரப்பிரதேசத்தில் 80 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மக்களவையில் தொகுதிகள் அதிகரிக்கும்போது உத்தரப்பிரதேசத்தில் 143 உறுப்பினர்களாக அதிகரிக்கிறது. 14.74 சதவிகிதமாக இருக்கக்கூடிய எண்ணிக்கை 16.86 சதவிகிதமாக உயர்கிறது. அதேபோல், பீகாரில் 40 இடம் தற்போது உள்ளது. மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பீகாரில் 79 உறுப்பினர்களாக அதிகரிப்பார்கள். 7.36 சதவிகிதமாக இருக்கக்கூடிய எண்ணிக்கை 9.31 ஆக உயர்கிறது. அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் 5.34 சதவிகிதமாக இருக்கக்கூடிய எண்ணிக்கை 6.13 ஆக உயர்கிறது. இது போன்ற மாநிலங்களில் மக்களவையின் பிரதிநிதித்துவம் உயர்கிறது. சதவிகிதம் அடிப்படையில் பார்த்தால் மக்களவையில் தென் மாநிலங்களின் பிரநிதித்துவம் குறைகிறது. இந்தி பேசுகின்ற பத்து மாநிலங்களில் கிடைக்கக்கூடிய இடங்களை வைத்துக் கொண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வர முடியும். இதுதான் வியூகம். அதனால்தான், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திவிட்டு அதன்பிறகு தொகுதியை மறுசீரமைப்பு செய்தால் சுலபமாக பத்து மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்தினால்போதும். 26 மாநிலங்கள் மற்ற யூனியன் பிரதேசங்களில் பூஜ்ஜியமாக வந்தாலும் குறிப்பிட்ட பத்து மாநிலங்களில் 80 சதவிகித வெற்றியை பா.ஜ.க பெற்றுவிட்டால் ஆட்சி அமைக்க முடியும். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தென் மாநில மக்களை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் ஒரே சமத்துவம் என்று இல்லாமல்... இன்றைக்கு தொகுதி பிரிவினை மூலமாக கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதனை, வருமுன் காப்போம் என்பதைப் போல வருமுன் தடுப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2024 -ம் ஆண்டு சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானத்தையும் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். 2026 -ல் தான் இதற்கு இறுதி. இதற்கு பா.ஜ.க எதையும் சொல்லவில்லை. 2026-ல் என்ன செய்ய போகிறோம் என்றும் அவர்கள் கூறவில்லை. குடும்பக் கட்டுப்பாடு போன்ற சமூக பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நமக்கு தண்டனை கிடைக்க வேண்டுமா என்பதுதான் நாங்கள் மக்கள் முன்பு வைக்கக்கூடிய கேள்வி?. நாம் தண்டனை அடையக் கூடாது. நமக்கு பரிசுகள் தான் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். மறுசீரமைப்புக்கு முன்னால் அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி ஒருமித்த கருத்து அடிப்படையில் எப்படி இந்திரா காந்தி அரசும், வாஜ்பாய் அரசும் தொடர்ந்து 25 ஆண்டுகள் நீட்டித்து தந்தார்களோ... அதே போல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காமல் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான் தி.மு.க மற்றும் இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளின் கோரிக்கை.

நாங்கள் சொன்ன கணக்கை எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது. மக்கள்தொகை அடிப்படையில் இருந்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். தென் மாநிலங்கள் பாதிக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு, அதை வலியுறுத்தி ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடைய தீர்மானமாக அனுப்பப் போகிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள். யார் அழைத்தாலும் எந்த மேடையில் வேண்டுமானாலும் நாங்கள் விவாதிக்க தயாராக உள்ளோம். புள்ளி விவரங்களோடு தான் பேசுகிறோம். கருத்தரிப்பில் இந்தியாவுடைய சராசரிக்கும் கீழ்தான் தமிழ்நாடு உள்ளது. அதனால் இன்று இருக்கக்கூடிய நிலைமையில் தமிழ்நாடு உரிமை பறிபோய் விடக்கூடாது. அதனால்தான் மேலும் 25 ஆண்டுகள் வேண்டுமென்று கேட்கிறோம்.
தேசவிரோத குற்றம் என்ன செய்தோம் என்று அமித் ஷா கூற வேண்டும். மக்களுக்கு நல்ல திட்டங்களை தான் கொண்டு வந்துள்ளோம். உள்துறை அமைச்சர் இது போன்று பேசியுள்ளார் என்றால், என்ன குற்றச்சாட்டு என்று கூறிவிட்டு சொன்னால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கின்றோம். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கிண்டல் செய்தால் கிண்டல் செய்யட்டும். அவர் பாயசத்தை பற்றி பேசுவார். சீமான் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. அவர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை என்றால், நீதிமன்றம் அவரைப் பார்த்துக் கொள்ளும். நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுக்கும்” என்றார்.