தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி
தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!
ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் பத்து ரூபாயில் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த பத்து ரூபாய் டாக்டர் என பலதரப்பட்ட மக்களாலும் போற்றப்பட்ட டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது முப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர், டாக்டர் டி.கே. சுவாமிநாதனின் தந்தையாவார். மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்படுபவர்.
டாக்டர் ரத்தினம் பிள்ளை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மருத்துவ வசதி இல்லாத காலமான அக்காலங்களில் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் குறைந்த செலவில் அதனை சரி செய்து விடக் கூடிய திறமை வாய்ந்த மருத்துவராக இருந்து வந்தார்.
இந்த காலங்களில் இவர் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமல் மகப்பேறு மருத்துவம் பார்த்து ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் செய்து மிகச்சிறந்த பெயரை இப்பகுதி மக்களிடையே பெற்றார்.
தொடர்ந்து இப்பகுதி ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்றுக் கொண்டு மருத்துவம் செய்து வந்த இவரை இப்பகுதி மக்கள் போற்றி வந்தனர். இவரின் இந்த சமூக சேவையைப் பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இயற்கை எய்தினார். இதனை அடுத்து அவரது உடலுக்கு பலதரப்பட்ட மக்கள், உள்ளூர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டாக்டர் டி.ஏ.கே. ரெத்தினம்பிள்ளை, சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்றும், அவரது இறுதி ஊர்வலம் ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கி, நல்லடக்கம் நடைபெறவிருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.