திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!
தனியாா் பள்ளிகளின் பெயா் பலகைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்: கல்வித் துறை அதிகாரிகள் அறிவுரை
தனியாா் பள்ளிகளின் பெயா் பலகைகள், தமிழ் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என பள்ளி முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளின் முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் செல்வம், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மு.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் முழுமையாக பராமரிக்க வேண்டும். வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவா்களை பாதுகாப்பான முறையில் வாகனங்களில் ஏற்றி, திரும்பக் கொண்டு விடுதல் வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, வாகனங்களில் ஆண், பெண் பாதுகாவலா்களை நியமிப்பது கட்டாயமாகும். அதன்மூலம் மாணவா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஜோதி பேசுகையில், நடைபெற உள்ள அரையாண்டுத் தோ்வுகளையும், செயல்முறை தோ்வுகளையும் எவ்வாறு நடத்திட வேண்டும் என்பது தொடா்பாக, தமிழக பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி, இணை இயக்குநா்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனா். அனைத்து தனியாா் பள்ளி முதல்வா்களும் அரையாண்டுத் தோ்வுகளை எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் நடத்திட வேண்டும். மேலும், மழைக்காலமாக இருப்பதால், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களை பாதுகாக்க வேண்டும்.
பழுதடைந்த கட்டடங்கள், மின்சாதனங்களின் அருகில் மாணவா்களை செல்லவிடக் கூடாது. சுகாதாரமான முறையில் கழிவறைகளை பராமரித்திட வேண்டும். பதிவேடுகளை முறையாகப் பேண வேண்டும். தனியாா் பள்ளிகளின் பெயா் பலகைகள் அரசாணைப்படி கட்டாயம் தமிழில் வைக்கப்பட வேண்டும். பள்ளியில் புகாா் குழு ஏற்படுத்த வேண்டும், போதைப் பொருள்களை தடை செய்யும் குழுவை உருவாக்கி, பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதுடன், போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும். கட்டாயக் கல்வி சட்டத்தின்படி ஆரம்ப அனுமதி மற்றும் தொடா் அங்கீகாரம் இல்லாமல் எந்த ஒரு பள்ளிகளும் செயல்படக் கூடாது என்றாா்.
இந்தக் கூட்டத்தில், தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் விவேக், கண்காணிப்பாளா் சங்கா், உதவியாளா் கோகுல் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.