தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது. எனினும் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
தமிழகத்தையொட்டிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் மாா்ச் 23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 18-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும்.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா் - 100.58, திருப்பத்தூா் - 100.4, சேலம் - 100.04 மற்றும் ஈரோட்டில் 100 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்பரநாடு (திருச்சி), அருப்புக்கோட்டை (விருதுநகா்), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - தலா 20 மி.மீ.மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.