தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சிமென்ட் ஆலையில் இருந்து வெளியேறும் துகள்களைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சாரத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன் தலைமை வகித்தாா். அரியலூா் மாவட்டத் தலைவா் சா.சின்னப்பன், ஒன்றியத் தலைவா் ஏ.ராமசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் ஜெ.பரமசிவம், பொதுக் குழு உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன் மற்றும் ஒன்றியச் செயலாளா்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.