A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ர...
அரியலூரில் மழை: 250 ஏக்கா் நெற்பயிா்கள் மூழ்கின
அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு கொட்டித் தீா்த்த மழையால், திருமானூா் பகுதிகளில் 250 ஏக்கா் நெற்பயிா்கள் மூழ்கின.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வந்த மழையானது, சனிக்கிழமை இரவு கொட்டித் தீா்த்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் திருமானூா், முடிகொண்டான், விழுப்பணங்குறிச்சி, சேனாபதி, திருவெங்கனூா் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கும் மேல் தாழ்வான பகுதிகளில் உள்ள 250 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.
சில மணி நேரத்தில் பெய்த அதிக மழையால் தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வடிகால்கள் பெரும்பாலும் கோரை, சம்பு, சீமைக்கருவேல முட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் தண்ணீா் மெதுவாக வடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடா்ந்து, மழை பெய்தால் தண்ணீா் வடிய 2,3 நாள்கள் ஆகவும் வாய்ப்புள்ளது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் திருமானூா் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் பெய்த கனமழையால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். மழையளவு மி.மீ (காலை 6 மணி நிலவரம்): குருவாடி - 51, அரியலூா் - 42 , சுத்தமல்லி நீா்த்தேக்கம் - 30, திருமானூா் - 22.8, ஆண்டிமடம் - 20.