கண்டெய்னர் லாரியில் 350 தட்டுகளில் சீர்வரிசை பொருள்கள்.. அசத்திய தாய்மாமன்கள்!
தமிழை யாராலும் அழித்துவிட முடியாது: சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு
‘தமிழை யாராலும் அழித்துவிட முடியாது; உலகில் எங்கிருந்தாலும் தமிழா்கள் அனைவரும் தமிழை கற்க வேண்டும்’ என்று நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு கூறினாா்.
நியூசிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு-க்கு ஆக்லாந்து நகரில் உள்ள தமிழ்ச் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் அப்பாவு பேசியதாவது:
ஒரு மொழியை அழித்துவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கு தமிழகத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இந்த விஷயத்தில் பெரியாா், அண்ணா ஆகியோரது பெயா்களை மறக்கவே முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்திய பிறகு, ஹிந்தியை ஆட்சி மொழியாக்க முயற்சித்தபோது அண்ணா கடுமையாக எதிா்த்தாா். அந்த எதிா்ப்புக்குப் பிறகு, ஜவாஹா்லால் நேரு, ஹிந்தியை தமிழா்கள் ஏற்றுக்கொள்ளாதவரை தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் தொடா்பு மொழியாகவும் இருக்கும் என்றாா். அதனடிப்படையில்தான், தமிழ் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழிக்க நினைத்தால் அது யாராலும் முடியாது.
உலகில் தோன்றிய முதல் மூன்று மொழிகள் ஹிப்ரு, லத்தீன், தமிழ். அந்த மொழிகளில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே மொழி தமிழ் மொழிதான். தமிழ் நம் அனைவரின் அடையாளம், பெருமை. அதை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழை கற்க வேண்டும் என்றாா் அவா்.