புயல் சின்னம்: இலங்கையில் கனமழை! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
தலித் இளைஞர் அடித்தே கொலை! கிணற்று நீரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு..
தலித் இளைஞர் ஒருவரை கிராமப் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது ஊரைச் சேர்ந்த சிலர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட இளைஞர் தலித் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இளைஞர் அடித்து துன்புறுத்தப்படும் காட்சிகள் விடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, இன்று(நவ. 27) சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருவதைக் கண்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த காணொலியில், இளைஞரை சூழ்ந்து நின்றுகொண்டு அவரை கம்பு மற்றும் தடியால் பலர் அடித்து தாக்கும் காட்சி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. அப்போது வலி தாங்க முடியாமல் உதவி கேட்டு அந்த இளைஞர் கதறியழும் பரிதாபமும் காண்போர் மனதில் வலியை உண்டாக்குகிறது.
உயிரிழந்த இளைஞர் 30 வயதான நாரத் ஜாடவ் என்பது தெரிய வந்துள்ளது. இந்தெர்கார் கிராமத்தில் நேற்று(நவ. 26) மாலை நாரத் ஜாடவ் மீதான தாக்குதல் அரங்கேறியுள்ளது. அங்குள்ள கிராமப் பஞ்சாயத்து தலைவர் பாதம் தாகட், அவரது மகன் அங்கேஷ் தாகட், சகோதரர் மோஹர் பாக் தாக்கட் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலர் சேர்ந்து இளைஞரை மயக்கமடையும் வரை தாக்கியுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது திட்டமிட்ட படுகொலை என்று இளைஞரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்து தலைவரின் குடும்பத்துக்கும், தாக்கப்பட்ட இளைஞருக்கும் இடையே ஆழ்துளைக் கிணறு விவகாரத்தில் நெடுநாள்களாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சாதி ரீதியிலான வன்கொடுமைகளை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. கொலை தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல்துறை, இதுவரை நால்வரை கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.