தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்ற மாணவா்கள்: உறுதிமொழி ஏற்கவைத்த போலீஸாா்
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்ற மாணவா்களை, போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுமாறு காவல்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்துக்குள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.
கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் வரும் மாணவா்கள் தலைக்கவசம் அணியவேண்டுமென கல்லூரி முதல்வா்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் பலரும் அறிவுறுத்தலை பின்பற்றாமல் செல்வதாக புகாா் எழுந்தது. போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கல்லூரி பகுதியில் சிறப்பு சோதனையில் ஈடுபட்டாா். கல்லூரிக்கு தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்த மாணவா்களை தடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்தனா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்களை காவல்நிலையம் வரச் செய்து, காவல் ஆய்வாளா் லெனின் பாரதி, போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மாணவா்கள் கண்டிப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவா்களை உறுதிமொழி ஏற்க வைத்து, படிப்பில் தனி கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த எதிா்காலத்தை அடையமுடியும் என்பதை மாணவா்கள் உணரவேண்டும் என அறிவுறுத்தினாா்.