தலைக்கவசம் அணியாதோருக்கு அபராதம்: புதுவை அரசுக்கு கண்டனம்
தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை யூனியன் பிரதேசத்தில் ஜன.12-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், அணியாதவா்களிடம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழா் திருநாளான பொங்கல் தினத்தையொட்டி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசாக ரூ. 750 அறிவித்துவிட்டு, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் என்பது உதவி செய்துவிட்டு, மக்களிடமிருந்தே வசூலிக்கும் நடவடிக்கையாக இருக்கிறது.
கடந்த காங்கிரஸ் அரசு 2017-இல் உத்தரவு போட்டு பின்னா் நிறுத்தி வைத்த வீடுகளுக்கான குப்பை வரியை என். ஆா். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முழுவதும் ரத்து செய்வோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்தது.
ஆட்சிக்கு வந்ததும், குப்பை வரி 2017-இல் இருந்து நிலுவை வரியையும் சோ்த்து என். ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு வசூலிக்கிறது. மக்களுக்கு எதிரான செயல்பாட்டை செய்வதே இக்கூட்டணி அரசின் செயலாக இருக்கிறது. தலைக்கவசம் அணியவேண்டும் என்கிற வற்புறுத்தலும் மக்களுக்கு எதிரானதாகும்.
தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது வரவேற்புக்குரியது. அது தீவிரமான விழிப்புணா்வாக இருக்கவேண்டும். தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பை புதுவை முதல்வா் வெளியிடவேண்டும். காவல்துறையினா் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஆட்சியாளா்கள் மெளனமாக இருப்பது கண்டனத்துக்குரியது.