``எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!'’ - 'சத்தமில்லா' தீபாவளி கொண்டாடும் கிராமங்...
`தளபதி’ கெட்டப்பில் சுற்றிய ரசிகர்கள்! - 1991 தீபாவளி நினைவுகள் #DiwaliCinema
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பள்ளி செல்லும் பருவத்தில் தீபாவளி என்றாலே கிடைக்கப் போகும் புது சட்டை, பலகாரங்கள் மற்றும் வெடிக்கப் போகும் வெடிகள் இவைதான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். பள்ளியில் அந்த சமயத்தில் தமிழ் கட்டுரை நோட்டில், கண்டிப்பாக தீபாவளியை பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டி இருக்கும்.
வீட்டில் தீபாவளியின் போது செய்யப்படும் பலகாரங்களுக்கு தனி சுவைதான். அதிலும் சூஸ்பரி (மைதா பிஸ்கட்/நெய் பிஸ்கட்) தான் எங்களை மிகவும் கவர்ந்தது. அதைச் செய்வதற்கான பெட்டி, உறவுகளில் அல்லது பக்கத்து வீடுகளில் யாரேனும் ஒருவரிடம் தான் இருக்கும். அதை மற்றவர்களும் வாங்கி பயன்படுத்திக் கொள்வார்கள்.
சின்னதா, அழகா 1 அல்லது 1½ அடி உயரத்தில், அடுப்புக் கரியை போடுவதற்கு கீழே ஒரு பாகமும், அதற்கு மேலே, அச்சில் வார்த்த மாவை வைத்து வேக வைப்பதற்கு கைப்பிடியுடன் கூடிய ஒரு தட்டு(மேசை டிராயர் போல), அச்சுகள் (வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், நீள் வட்டம், நட்சத்திரம், பிறை நிலா & மேலும் பல) இவை அனைத்தும் சேர்ந்ததுதான் சூஸ்பரி தயாரிப்பதற்கான உபகரணம். அடியில கரியைப் போட்டு, மேல்தட்டில், அச்சில் வைத்து அந்தந்த வடிவத்தில் எடுத்த மாவை, வேக வைத்து எடுப்பதை வேடிக்கை பார்ப்பது எங்களுக்கு வாடிக்கை.

மற்ற பலகாரங்கள் செய்யும் பொழுது, அதை சாப்பிடுவதற்குத் தவிர வேடிக்கை பார்ப்பதற்குக் கூட அருகில் செல்வதில்லை நாங்கள். அந்த அச்சுக்களை கொண்டு விதவிதமாக மாவில் அழுத்தி எடுத்து வைப்பதில் தான் பிள்ளைகள் எங்களுக்குள் சிறு போட்டியே நடக்கும். ‘நான் இந்த அச்சு தான் வைப்பேன்’, ‘நான் இந்த அச்சு வைக்கிறேன்’, ‘நான் இதுதான் வைப்பேன்’ என்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவது பெரும் சுவாரஸ்யம் அப்போது.
வீட்டில் செய்யப்படும் சூஸ்பரியின் சுவை கடையில் கிடைப்பதே இல்லை. சில நேரங்களில் கடையில் பார்த்துவிட்டு, ‘ஹை சூஸ்பரி’ அப்படின்னு ஆசைப்பட்டு வாங்கி, சுவைத்தவுடன், வீட்டில் போடுற மாதிரி இல்லையே அப்படின்னு ஃபீல் பண்ணிட்டு, அப்புறம் கடையில் வாங்கும் எண்ணத்தையே கைவிட்டாச்சு. என்னவோ அனைத்து பலகாரங்களுமே சுவையாகவே இருப்பினும் ‘சூஸ்பரி’ க்கு மட்டும் எப்போதும் தனி இடம் தான் நாவிலும் மனதிலும்.
தீபாவளி அன்று காலை பெரும்பாலும் மழையோடு தான் விடியும். மொட்டை மாடியில் அந்த தூறல் மழையில் சிறிது நனைந்தவாறே, மலைகள் சூழ்ந்த எங்க சொந்த ஊரை வேடிக்கைப் பார்த்தப்பின், அந்தக் குளிரில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு, புது டிரஸ் போட்டு மற்றவர்களிடம் சென்று காட்டி ‘எப்படி இருக்கு.. எப்படி இருக்கு’ ன்னு கேட்டு கொஞ்சம் அலட்டிட்டு, சாப்பிட்டுட்டு, மாமா பிள்ளைகள், பிரண்ட்ஸ், தம்பி பிரண்ட்ஸ் என எல்லாருடைய டிரஸ்ஸையும் பார்த்து கமெண்ட் அடிச்சிட்டு, நமக்கு பிடிச்ச பலகாரத்தை போகும்போது வரும்போதெல்லாம் சாப்பிட்டு, இடையில் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்து, அப்படின்னு ஒரே பிசி தான் அன்று முழுவதும். ஒரு முறை, தம்பியின் நண்பன் ரொம்ப ஸ்டைலா, மாடர்னா ஒரு டிரஸ் போட்டுட்டு வந்தான்.
‘ஹேய்… என்னடா விளம்பர மாடல் மாதிரி டிரஸ்?’ அப்படின்னு நாங்க எல்லாரும் சொல்ல, அவன் வெட்கப்பட்டதெல்லாம் அழகோ அழகு. அடுத்தடுத்து வந்த தீபாவளியிலும் அவனை ‘நம்ம ஊர் மாடல் எங்கடா?.. இன்னும் காணோம்??’ அப்படின்னு தான் கேட்போம். ஒருமுறை என் மாமாப்பெண் புது டிரஸ் போட்டுட்டு வந்து எல்லார்கிட்டயும் காட்டும் பொழுது, தம்பி, அப்பாயி, அம்மாச்சி லாம்,
“துணி பத்தலையா? பேண்ட் சின்னதா இருக்கு?”
“ஏன் நல்ல நாள் அதுவுமா பத்தாத சட்டை போட்டு இருக்க? புதுசு போடலையா?”
என்று கேட்க, எல்லோரும் (அது உட்பட) சிரிச்சிட்டோம். ஐயோ அதுதான் டிசைன் அப்படின்னு அன்று முழுவதும் விளக்கம் சொல்லி சொல்லி சலிச்சு போனதெல்லாம் ஜாலி தீபாவளி மொமென்ட்ஸ்.

சாயந்திரம் எல்லாரும் சேர்ந்து நின்னு கொஞ்ச நேரம் மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரம் னு, மாத்தி மாத்தி வச்சிட்டு, பெரிய வெடி வைக்க பயப்படும் குட்டீஸ், பெரியவங்க யாராச்சும் கைப்பிடிச்சு பெரிய வெடி வச்சு அது வெடிச்சாலே சாதனை தான். பசங்க பெரிய வெடி வைக்கும் போது சுத்தி உள்ளவங்க அந்த நெருப்பின் நுனி ஊதுவத்தியிலா அல்லது வெடியிலா என்று தெரியாமல் “ஹே..நெருப்பு வச்சுட்ட .. ஓடி வந்துடு’, ’இல்லல்ல வைக்கவே இல்லை’ என்ற குரல்களுக்கு மத்தியில் நெருப்பை வைக்கப் போவதும் பின் ஓடி வருவதும், பின் மீண்டும் ஓடி பற்ற வைப்பதும், வெடி வெடித்ததும் கைத்தட்டி ஆர்ப்பரிப்பதும் என்று சில வருடங்கள் கலாட்டாவான தீபாவளிகள்.
இதுல எங்க அப்பாயி தனியா ஒரு தீபாவளி கொண்டாடுவாங்க.. எப்படினா, வெடிகள் சுற்றி வரும் பேப்பர், அட்டை குப்பைகளை, வீட்டின் பின்புறம் இருக்கும், தண்ணீர் சுட வைக்கும் விறகடுப்பில் போடுவாங்க. அதில் விட்டுப்போன சில பொட்டு பட்டாசுகள் ‘டம் டும்’ என்று அடுப்பிற்குள் வெடிக்கும். ‘நேத்தே அப்பாயிகிட்ட ரெண்டு வெடி, வெடிக்க கொடுக்க சொன்னேன்…. கேட்டீங்களா.. இப்ப பாரு அப்பாயி தனியா தீபாவளி கொண்டாடுறாங்க” என்று சகோதரர்கள் கிண்டல் செய்வார்கள்.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை பார்ப்பதெல்லாம் எங்களுக்கு வழக்கத்திலேயே கிடையாது. அதுவும் பெண் பிள்ளைகளான எங்களுக்கு வாய்ப்பே இல்லை.
அண்ணன்கள், மாமா பசங்க எல்லாம் போவங்க. 1991 தீபாவளிக்கு பெரியம்மா வீட்டில் இருந்தபோது, தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த “தளபதி” திரைப்படம் ரிலீஸ். அதுக்கு எவ்ளோ எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் என்றெல்லாம் அந்த வயதில் தெரியாது.
பெரியம்மா வீட்டில், வாசல் படியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, நீண்ட கருப்பு அங்கி, உச்சி மண்டையில் ஒரு கொண்டை (‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலில் ரஜினியின் கெட்டப்) என்று சில பேர் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் செல்வதை பார்க்க முடிந்தது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம்..
தீவிர ரஜினி ரசிகரான என் அண்ணனிடம் கேட்டபோது
“படத்துல தலைவர் அந்த கெட்டப் ல வருவார்.. அதுதான் அப்படி போறாங்க”
“இப்படியெல்லாம் கூடவா போவாங்க?”
“ஆமா.. தியேட்டர்ல வந்து பாரு எப்படி இருக்கும்னு.. எவ்ளோ கைதட்டல், விசில்… பேப்பர் எல்லாம் எப்படி பறக்கும் தெரியுமா?”
அப்படின்னு கேட்டுட்டு அதுவும் படம் பார்க்க போயிடுச்சு. தீபாவளி ரிலீஸ் அதுவும் ரஜினி படம் என்றால் இந்த வகையான கொண்டாட்டம் எல்லாம் இருக்கும் என்பது அப்போதுதான் தெரிந்தது.

தீபாவளிக்கு தியேட்டர்ல மட்டும்தான் படம் ரிலீஸ் ஆகுமா என்ன? இல்லையே… எங்கள மாதிரி ஆளுங்களுக்காக தான், "இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக" என்ற அறிவிப்புடன், டிவியில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களும் ஸ்பெஷல்தான். அந்த வகையில், 90களின் பிற்பகுதியில், வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இல்லாத நாட்களில், தீபாவளி அன்று ரிலீசான படம் “பாட்ஷா”. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்.
‘சாயந்திரம் பாட்ஷா பாக்கணும்’ ‘பாட்ஷா பாக்கணும்’ என்று எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்க. எங்கேயோ வெளியே போயிட்டு ஆறேகால் மணி போல வீட்டுக்கு வந்தா… ஹால் முழுக்க ஆட்கள். “ஹவுஸ்ஃபுல்” போர்டு போடுற மாதிரி இருக்கு. அந்தப் படத்தில் மாஸ் சீன்ஸ், காமெடி, பாட்டு, சண்டை என எதற்குமே குறைவிருக்காது அதனால் என்ஜாய்மென்ட்க்கும் குறைவே இல்லை.
எல்லோரும் சேர்ந்து சிரிச்சு, கைதட்டி (தம்பி நண்பர்கள், பக்கத்து வீட்டு பசங்க அன்னைக்கு விசில் கூட அடிச்சானுங்க.. எங்க வீட்ல விசில் அடிக்கிறதெல்லாம் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்ட விஷயம்), ஆர்ப்பரித்து என, ஒரே ரணகள குதூகலம் தான்.
பேப்பரை கிழிச்சு பறக்க விடாதது மட்டும் தான் குறை. அவ்ளோ சந்தோஷமா பார்த்தோம் அந்த படத்தை. படம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட ரொம்ப நேரம் அத பத்தி சந்தோஷமா பேசி சிரிச்சு, ரசித்து என கொண்டாட்டம் தான். அப்பதான் ‘வாழ்க்கையில ஒரு முறையாவது ரஜினி படத்த முதல் நாள் முதல் ஷோ பாக்கணும்… இந்த சந்தோஷத்தை, ரசிகனின் கொண்டாட்டத்தை திரையங்கில் நேரில் பாக்கணும்’ அப்படின்னு தோணுச்சு. பின்னாளில், கணவரின் துணையால் அந்த ஆசை சாத்தியமானதும், அந்த கொண்டாட்டத்தை வெகுவாக ரசித்ததும் தனிக்கதை.
அனைவருக்கும் பாதுகாப்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.