`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்
தில்லி: தெற்கு தில்லியின் நெப் சாராய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீடு திரும்பிய பொழுது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தில்லியின் நெப் சாராய் பகுதியை சார்ந்தவர் ராஜேஷ் தன்வர் (வயது 55), ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் தனது மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுனுடன் வசித்து வந்தார். இன்று அதிகாலை அர்ஜுன் தனது வழக்கமான நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது தனது தாய், தந்தை மற்றும் சகோதரி மூவரும் குத்திக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அலறியுள்ளார். அர்ஜுனின் அலறல் சப்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட செய்தி அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கொலையான மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “அதிகாலை வழக்கமான நடைபயிற்சிக்கு சென்ற அர்ஜுன் தனது தாயாரான கோமலிடம் வாசல் கதவை பூட்டிக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றதாகவும் அவர் நடைபயிற்சி சென்ற நேரத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் கூறினர். மேலும் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
ராஜேஷ் மற்றும் கோமல் தம்பதியின் திருமண நாளான இன்று அவர்கள் மகளோடு கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.