Inbox 2.0 : Eps 10 - பலத்த காயங்களுடன் பத்தாவது நாளில்! | Cinema Vikatan
திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான்: உயர் நீதிமன்ற நீதிபதி
சென்னை: திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றுதான், இரண்டு கட்சிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை. சொந்தக் கட்சியைப் பற்றி மட்டுமே உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார்.
மேலும், அதிமுகவும் திமுகவும் மாறி மாறி வழக்குப் பதிவு செய்துகொண்டே இருந்தால், நீதிமன்றங்கள் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி வேல்முருகன், தருமபுரி அருகே பேருந்து எரிப்பு சம்பவம் குறித்து பேசினார். கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் தீ வைத்து எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகிவிட்டனர். அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும், இரண்டு கட்சியினருக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை. உங்கள் வழக்குகளை விசாரித்தால் மட்டும் போதுமா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினர் அதே பணியில் இருக்கின்றனர். தேவையில்லாமல் காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப்படுகிறது என்றார்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குறை கூறுகின்றதே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரண்டு கட்சிகளுக்குமே இல்லை. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைத்தான் கூறுகிறார்கள்.
இருப்பை தக்கவைத்துக் கொள்ள இரு தரப்பும் குறை சொல்கின்றன. இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து செல்லூர் ராஜு மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.