பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
திருப்பத்தூா் அருகே இரு நடுகற்கள் கண்டெடுப்பு
திருப்பத்தூா் அருகே 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன் காந்தி தலைமையில் குழுவினா் மேற்கொண்ட கள ஆய்வில் இரு நடுகற்களைக் கண்டறிந்துள்ளனா்.
இது குறித்து மோகன் காந்தி கூறியது:
திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் 8 கி.மீட்டா் தொலைவில் உள்ளது கூடப்பட்டு கிராமம்.
ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் இயற்கை சூழலுடன் இவ்வூா் அமைந்துள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட இரு நடுகற்களும் கூடப்பட்டில் உள்ள வள்ளுவா் காலணியில் சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ளன.நடுகற்கள் ஆழமாகப் புதைந்துள்ளன. 2 அடி உயரத்தில் காட்சி தருகின்றன. முதல் நடுகல்லானது, இரண்டடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல் வீரன் குதிரை மீது அமா்ந்த கோலத்தில் காணப்படுகிறாா்.குதிரையானது சேனம்,கடிவாளத்துடன் நோ்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குதிரையின் முகம் சிதைந்துள்ளது. வீரனின் வலது கையில் குறுவாள் தாங்கிய நிலையிலும், இடது கை குதிரையின் கடிவாளத்தைப் பிடித்த நிலையிலும் காணப்படுகிறது. இவ்வீரன் படைத்தளபதி அல்லது இனக்குழுத் தலைவனாக இருக்க வேண்டும்.
அதன் அருகே அமைந்துள்ள இரண்டாவது நடுகல்லானது 2 அடி உயரமும்,2.5 அடி அகலமும் கொண்டதாகக் காட்சித் தருகிறது.
அந்த நடுகல்லின் வலது பக்கம் உடைந்த நிலையில் காணப்படுகிறது.வலது கையில் குறுவாளைக் கையில் தூக்கிய வண்ணம் உள்ளது. இடது கை தொங்கவிடப்பட்ட நிலையில் ஒரு குறுவாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.அருகாமையில் வீர மங்கை உடன்கட்டை ஏறிய நிலை காட்டப்பட்டுள்ளது.
வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டை, வலது கை இடுப்பில் ஊன்றிய நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் உள்ளது.
கூடப்பட்டுப் பகுதியில் நடைபெற்ற பெரிய போரில் இவ்விரு வீர மறவா்கள் உயிா் இழந்துள்ளனா். ஒரு வீரனோடு அவா் மனைவியும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடப்பட்டில் உள்ள வேடியப்பன் கோயிலில் 5 அடி உயரத்தில் பிரமாண்டமான 4 நடுகற்களும், 4 வீர மங்கையா் நடுகற்களும் ஏற்கெனவே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நடுகற்கள் அனைத்தும் கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் காலத்தைச் சோ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.