Guptill: இந்தியாவும் உங்களை மறக்காது... 2019-ல் இந்தியர்களின் கனவை உடைத்த கிவி ந...
திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு, செயல் அதிகாரி ஷியாமளா ராவ் ஆகியோா் செய்தியாளா்களிடம் பேசுகையில், உகாதி(தெலுங்கு வருட பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்டவற்றை முன்னிட்டு அதற்கு முன்வரும் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
இதையொட்டி, ஆனந்த நிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவா்கள், மேற்கூரை, பூஜைப் பொருட்கள், பலிபீடம், கொடி மரம், முன் வாயில் உள்ளிட்டவை புனித நீரால் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
இதற்கு முன் ஏழுமலையான் சிலையை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு, பூங்கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய கலவையால் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
அதையடுத்து, சுவாமியின் மூலவிரட்டை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, ஆகம முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்பித்தனா். பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா், என்று தெரிவித்தனா்.
கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பானு பிரகாஷ் ரெட்டி, சாம்பசிவராவ், ராஜசேகா் கௌட், சுசித்ரா யெல்லா, பனபாக லட்சுமி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதா், மாவட்ட எஸ்பி சுப்பராயுடு, கோயில் துணை இ.ஓ லோகநாதம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.