செய்திகள் :

திருமூலர் குருபூஜை: `வாழ்வில் பெரும் திருப்பங்கள் உண்டாக' - தினமும் தியானித்து வழிபட வேண்டியவர்

post image
'ஐப்பசி-அசுவதி' - 14.11.2024 திருமூலர் குருபூஜை தினம்! தியானம் பயில்பவர்களுக்கும்: குருவருளை விழைபவர்களுக்கும் ஏற்றதோர் அருமையான சிவபூமி இது. இன்றளவும் அசுவினி நட்சத்திரத்தை உடையவர்கள் அந்நட்சத்திர நாளில் இங்கு வழிபட்டு சிறப்புறுவது கண்கூடு.
திருமூலர்

இடையறாத ஓங்காரம் பொங்கி நிறைந்திடும் கயிலை மலை. சிற்பர யோகியரும்; சித்தர்களும்; முனிவராதிகளும் சிவதியானத்தில் திளைத்திருக்க,  அங்கிருந்த சகலத்தினுள்ளும்  சிவம் பரிபூரணமாய் நிறைந்திருந்தது. முழுமை பெற்று ஒளிர்ந்து கொண்டிருந்த  சிவயோகங்களில் ஒன்று அங்குமிங்கும் அலைந்து சுழன்றது; மலைச்சாரலின் வழியே கீழிறங்கி நகர முயற்சித்தது. அதன் நோக்கம்  உணர்ந்த சிவம் மெல்லப் புன்னகைத்தது.  "அகத்தியனை நோக்கிப் போகட்டும்" எனக் கட்டளையிட்டது.  கட்டளையை உணர்ந்த பூரண யோகமும்  சந்தோஷமாய் நகரத்துவங்கியது 

ஒரு மகத்தான வரலாற்றிற்கு  ஆதார அச்சாய் காலாகாலத்திற்கும் அது விளங்கப் போவதை அந்த ஈசனையன்றி வேறு எவர் அறிவார்?!

அந்த பூரணத்தின் திருநாமம் சுந்தரநாத யோகி.  கயிலையில் நந்திமுகமாக  ஞானோபதேசம் பெற்றவர். இங்கு நந்தி என்பது சிவபெருமான். ஈசனின் கட்டளையை ஏற்ற அச்சிவயோகி கயிலைச் சாரலிலிருந்து இறங்கி, கேதாரம் கண்டு கைகூப்பித் தொழுது, தெற்கே பொதிகைமலையை நோக்கி  வான்வழியே பயணித்தார். 

இப்பொழுது நமக்குள்ளே ஒரு கேள்வி தோன்றலாம்! பூலோகத்து ஜீவர்கள் எல்லாம் கயிலாய வாழ்வினை எண்ணித் தவமிருக்க, அங்கு நிலைபெற்ற யோகிக்கு பூலோகத்திற்கு  வரவேண்டிய விழைவுதான் என்ன? சகலருக்கும் தோன்றிடும் நியாயமான கேள்விதான்.  காரணமில்லாது எந்தவொரு காரியமும் இல்லையே!

அன்றொரு நாள் சிவனாரும் திருமாலும் சொக்கட்டான் விளையாட  அதற்கு அம்பிகை நடுவராக அமர்த்தப்பெற்றாள். விளையாட்டின் இறுதியில் திருமால் ஜெயித்ததாக அம்பிகை கூறினாள். 

கோபத்தில் கனலாக மாறிய  எம்பெருமானின் நெற்றிக்கண் சிவந்திட  பிறந்தது சாபம். அஞ்ஞானத்தினால் பாசமாயை வசப்பட்டு பட்சபாதகமாக தீர்ப்பளித்த அம்பிகையை பசுவாகவே பூமியில் திரியும்படி சாபமளித்தார் சிவபெருமான்.  அஞ்ஞானத்தில் உழலும் ஆன்மாக்களை பசுக்களாக உருவகப்படுத்துவது இதன் மறைபொருள்.  சிவனாரின் காரணநிமித்தமான திருவிளையாடலை உணர்ந்த கோரூபாம்பிகை  

திருமூலர் குருபூஜை

விமோசனம் வேண்டி பிரார்த்தித்தாள்.  சிவபூமியாகிய திருவாவடுதுறையில்  கோரூபம் கழியுமென உணர்த்தப்பட்டது‌.  அம்மை கயிலை  விட்டு நீங்கி மெல்ல நகர்ந்திட,  தாய்ப்பசுவிற்குத்  துணையாக வாரணப்பிள்ளையும் பசுங்கன்றாய் மாறி பின்னோடியது‌.  மற்ற அன்னையரும் பசுக்கூட்டமாகி அன்னையைத் தொடர்ந்து  நகர அவர்களைப் பாதுகாத்திடும் எண்ணம் கொண்ட திருமாலோ கோஸஹர் என்கிற பசுமேய்ப்பராக மாறி பின்தொடர்ந்து அகன்றார்.  சக்தி நீங்கிய  கயிலை அசைவின்றி ஸ்தம்பித்தது.  

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அம்மை கோவுருவில் வழிபட்ட தலங்களையெல்லாம் நெடுகத் தரிசித்திடும் ஆவல் கொண்டதே சிவயோகியார் அங்கிருந்து புறப்பட முயன்ற காரணம்.  

கேதாரம்,  நேபாளம்,  அவிமுக்தம் (காசி), திருபருப்பதம் (ஸ்ரீசைலம்),  திருக்காளத்தி....  என்று கோரூபாம்பிகை வந்த வழித்தடம் பற்றி யோகியார் நகர்ந்து கொண்டிருந்தார். 

காவிரிக்கரை புகுந்தாயிற்று..! திருவழுந்தூர், கோமல்,  அசிக்காடு, திருக்கோழம்பம் என கோரூபாம்பிகை திருக்குளம்படி பட்ட  காவிரிதுறைத் தலங்கள்தான் எத்தனை?

காவிரி நிஜமாகவே புண்ணியவதிதான்! அகத்தியருடன் அவள் கடந்த இடங்கள் வருங்காலத்தில் தென்னகத்து புனிதத் தலங்களாகக் கொண்டாடப்பெறப் போகிற மகிழ்ச்சியில் துள்ளலாக சளசளத்து ஓடினாள் அந்நதிப் பெண்.

அந்தி நெருங்கிக் கொண்டிருந்தது. வான்வழியிலிருந்த  சிவ யோகி கோமுக்தீஸ்வரத்தினைத் தொலைவிலேயே  கண்டுவிட்டார். பசுவுருநாயகிக்கு ஐயன் முத்திப்பேறு அளித்தமையால் கோகழி எனப் போற்றப்படுகிற தலம்.  சாத்தனூர் வனத்தினை சிலநொடிகளில்  கடந்துவிட்டால் போதும்..! 

பரபரப்பான ஆவலுடன் மண்நோக்கிய யோகியாரின் விழிகளில் சிக்கிய காட்சி அவரைத் தடுமாற வைக்கிறது. என்ன அது?  காட்டின் நடுவே பசுக்கூட்டங்கள் கண்ணீர் பெருகிக் கதறிக்கொண்டு நிற்கின்றவே!

என்ன காரணம்..? ஓ..! மேய்ப்பன் அரவம் தீண்டிய விஷமேறி இறந்து கிடந்தான்.  மூலன் என்பது அவனது பெயர்.   சிவயோகியாருக்கு  சகலமும் புரிந்துபோயிற்று. கறவைகளின் நிலை கண்டு மனசு தாளாமல் அவ்விடத்தில் இறங்கினார். பரகாயப்பிரவேசம்  (கூடுவிட்டு கூடு பாய்தல்) செய்து தன்னுயிரை  மூலன் உடலில் செலுத்தி உடலை எழுப்பினார். 

கலங்கி நின்றிருந்த பசுக்களைத் தேற்றி ஊருக்குள்ளே அழைத்து வந்து உரியவர்களிடம் ஒப்படைத்தார். சாத்தனூச் சத்திரத்தில் அமர்ந்தார். தேடிவந்த மனைவியைக் கைகூப்பி வணங்கி, ஊரார் முன்னிலையில்   உண்மையை விளக்கினார். மூலன் உடல் தாங்கி வந்திருக்கும் தாம் ஓர் சிவயோகி என்பதைப் புரியவைத்தார். ஊர் அவருக்கு  வணங்கி  வழிவிட்டது.  வனத்தினுள் புகுந்தவர் மரப்பொந்தில் மறைத்து வைத்திருந்த தன்னுடைய உடலைக் காணாது  திகைத்தார்.  ஈசனின் சித்தம் இது என்பதை உணர்த்தப் பெற்றார்.  ஞானியர்  மனதில் தோன்றுவது எல்லாமே ஈசனின் கட்டளை அல்லவா?!  யோகத்தில் அமர எண்ணி அருகிலிருந்த அரசவனத்தினை  நோக்கி நடந்தார்.  

போதியம்பலம்  (இன்றைய திருவாவடுதுறை) அடைந்த திருமூலரை 'அகத்தியர்', 'போகர்', முதலான சித்தர்கள் எதிர் கொண்டழைத்தனர்.  ஒப்பிலாமுலையம்மை உடனாய கோமுத்தீசரை வணங்கிய பின்னர்,  வாயு மூலையில் , படர் அரசமரம் ஒன்றின் கீழே, கீழ்த்திசை நோக்கி, பதுமாசனக் கோலத்தில், யோகநிலையில் அமர்ந்தார்.

ஆண்டிற்கொரு முறை யோகம் களைந்து, தமிழ் மந்திரப்  பாடல் ஒன்றை அருளினார். இவ்வாறு 3000 ஆண்டுகள் யோகநிலையிலிருந்து பனுவல்களை அருளிச் செய்தார்.

ஒப்புயர்வற்ற திருமந்திரம் பிறந்தது! 

இப்பாடல்கள் அவர்தம் சீடர்களால் சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டன. உலகினை உய்விப்பதற்காக தாம் வந்த காரணம் பூர்த்தியான மகிழ்ச்சியில் திருமூலர் பரம்பொருளுடன் ஒன்றினார்.

திருமூலர்

பலகாலம் திருமூலர் யோகம் செய்த படர் அரச மரமும்; அதன் எதிரே அமைந்துள்ள ஆதி கோமுத்தீசர் சந்நிதியும்;  ஞானம் பெற்ற பிறகு எழுந்தருளியிருந்த சந்நிதிக் குகையும் திருவாவடுதுறையில்  மிக முக்கியமான இடங்கள்.   மாதந்தோறும் திருமூலருக்குரிய அசுவதி நட்சத்திரத்தன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுவது இத்தலத்திற்குண்டான சிறப்பு. திருமூலரும் அவரது குருவாகிய நந்தி தேவரும்  (உலாத் திருமேனிகள்) அஞ்சலி பாவனையில் ( கைகூப்பி வணங்கிய நிலையில்) மூலவரை  திருவலம் செய்தல் இத்தலத்தில் மட்டுமே  விசேஷம்.

திருமூலர் எழுந்தருளியிருந்த சந்நிதிக் குகையானது  ஆலயத்தின் மேலைச் சுற்றில் தனிக்கோயிலாக  நிறுவப் பெற்றுள்ளது. தியானம் பயில்பவர்களுக்கும்: குருவருளை விழைபவர்களுக்கும்  ஏற்றதோர் அருமையான சிவபூமி இது. இன்றளவும் அசுவினி நட்சத்திரத்தை உடையவர்கள் அந்நட்சத்திர நாளில் இங்கு வழிபட்டு சிறப்புறுவது கண்கூடு. 

'நம்பிரான் திருமூலர் அடியார்க்கும் அடியேன்' 

"சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந்  தேன்சிவன் ஆவடு தண்டுறை

சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் 

சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே"

                                                  - திருமந்திரம்

கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் துலா ஸ்நான மகிமைகள்

முடவன் முழுக்கு: கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா' ... மேலும் பார்க்க

`எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும்' - இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்

எழுத்துலக ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திருவரங்கனின் திருவடியில் கலந்துவிட்டார்.சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைக்கதைகள் என இவரின் படைப்புகள் காலத்தால் அழியாத... மேலும் பார்க்க

`திமுக அரசு ஆன்மிக அரசு' - பெரிய கோயில் சதய விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது. இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ராஜராஜ சோழனின் 1039-வது சத... மேலும் பார்க்க

1039-வது சதய விழா: `கணவற்கு நிலச்சுமை குறைந்தது என மகிழ்ந்த ஆதிசேடன் மனைவியர்" ராஜராஜனின் பெருமைகள்

பொதுவாக அரசர்களது பிறந்தநாள் விழாவினைப் 'பெருமங்கலம்' என்றும் ; 'புண்ணிய நன்னாள்' என்றும் போற்றுவது தொன்று தொட்ட தமிழ் மரபு. இதுபோன்ற நாள்களில் அரசர்கள் கொலை தவிர்த்து, சிறை விடுத்து, வெள்ளணி அணிந்து,... மேலும் பார்க்க

எதிர்ப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்! - நீங்களும் சங்கல்பியுங்கள்

ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் கிட்டும், மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்லலிதா என்றால் காப்பவள்! ஸ்ரீலல... மேலும் பார்க்க

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்: 6 வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றும் அற்புத வழிபாடு; பங்கு கொள்ளுங்கள்!

வரும் 2024 நவம்பர் 15 ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீ... மேலும் பார்க்க