மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
திருவள்ளூர்: ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் இடிப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் ருக்மணி சத்யபாமா சமேத சந்தன கோபால் கிருஷ்ண சந்தன விநாயகர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் வியாழக்கிழமை கோயிலை இடிக்க முடிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் கொட்டும் மழைக்கு இடையே இடித்து அகற்றினர்.
அப்போது கோயிலை இடிக்க விடாமல் போலீஸார் பாதுகாப்பையும் மீறி திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் மழையில் நனைந்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மக்களின் மறியலால் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து வட்டாட்சியர் வாசுதேவன், துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழரசி மற்றும் ஊராட்சி தலைவர் தமிழன்பன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.