தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!
தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இதனால், தூதரகத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும் சூழல் நிலவுகிறது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.
மேலும், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரியான சாத் அகமது வாரைச்சை நேரில் வரவழைத்த வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் அரசாணையை அதிகாரப்பூர்வமாக நேற்று நள்ளிரவு வழங்கினர்.