தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்
ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியின் ஒன்பதாவது முதல்வராக வியாழக்கிழமை பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா பொறுப்பேற்றவுடன் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷியின் இந்தக் கருத்து வந்துள்ளது. அவரது கட்சி மக்களுக்கு அளித்த ஒவ்வொரு உறுதிமொழியையும் புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் அதிஷி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் அதிஷி கூறியதாவது: ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தில்லி நகரம் நான்காவது பெண் முதல்வரைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.
தோ்தலுக்கு முன்பு, பிரதமா் நரேந்திர மோடி, ரேகா குப்தா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் தில்லி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 அவா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் என்று உறுதியளித்தனா். இந்தத் திட்டம் அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்றும், முதல் தவணை மாா்ச் 8- ஆம் தேதி அனுப்பப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.
இதனால், தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தனது வங்கிக் கணக்கை தனது கைப்பேசி எண்ணுடன் இணைக்க வேண்டும். இதன்படி, அவா்கள் மாா்ச் 8-ஆம் தேதி பணத்தைப் பெற முடியும் என்றும் பிரதமா் மோடி கூறியிருந்தாா் என்றாா் ஆம் ஆத்மி எம்எல்ஏவான அதிஷி
ஷாலிமாா் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா, வியாழக்கிழமை பிற்பகல் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் தில்லி முதல்வராகப் பதவியேற்றாா். ஆறு போ் அடங்கிய தனது அமைச்சா்கள் குழுவுடன் பதவியேற்ற உடனேயே, முதல்வா் தில்லி செயலகத்திற்குச் சென்று அரசு அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவா்களைச் சந்தித்தாா்.