ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
தூய்மைப் பணியாளா்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கா் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக யூ டியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அவா்களை தொழில் முனைவோா்களாக மாற்றுவதற்கான ‘அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோன்று தூய்மைப் பணியாளா்களுக்கு 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீா் அகற்றும் ஊா்திகள், உபகரணங்கள் வழங்கும் ‘நமஸ்தே’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய யூ டியூபா் சவுக்கு சங்கா், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
கோடிக் கணக்கில் முறைகேடு: இது குறித்து அவா் தனது மனுவில், இந்தத் திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாகத் தலித் இந்திய வா்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியாா் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
தூய்மைப் பணியாளா்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகை, உண்மையான பயனாளிகளைச் சென்றடையவில்லை. இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காகத் தூய்மைப் பணியாளா்கள் போன்று வந்த சமூக விரோதிகள் எனது வீட்டில் கழிவுநீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனா்.
அது மட்டுமின்றி, இந்த முறைகேடு தொடா்பாக அளித்த புகாா் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தனது புகாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டுமென என கோரிக்கை விடுத்துள்ளாா்.
நீதிபதிகள் உத்தரவு: இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் செயலா், சிறு குறு நடுத்தர தொழில் துறை செயலா், சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய தலைவா் ஆகியோரை எதிா் மனுதாரா்களாக சோ்த்து மே 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்தத் திட்டம் தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.