செய்திகள் :

"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான்

post image

கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலமாக பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

ரூ.1,791.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு `ஜி.டி.நாயுடு' பெயரை சூட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார்.

கோவை - அவிநாசி உயர்மட்ட மேம்பாலம்
கோவை - அவிநாசி உயர்மட்ட மேம்பாலம்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமங்கள், சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்டுவிட்டு, மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? என்று கேள்வியை முன்வைத்திருக்கிறார்.

இது குறித்து சீமான், "கோவையில் புதிதாக 1,791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தீரன் சின்னமலை பெயரை வைத்திருக்கலாமே?

இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும்பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்த தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

இந்தி திணிப்பை எதிர்த்து 1938-ல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 03.06.1938-ம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஜி.டி. நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?

எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத் திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி. நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்?

திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா?

சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் முத்துராமலிங்கத் தேவர் சாலை எனப் பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இந்த அரசு, பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?

பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி?

நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா?

சீமான்
சீமான்

இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்குப் பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா?

கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது தி.மு.க அரசு.

ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய தி.மு.க அரசு, ஜி.டி. நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா?

தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆகவே, கோவை - அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், பொன்னர் - சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றைச் சூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் பெயர் சர்ச்சை - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் கெட்டிக்காரர் என முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். முதல... மேலும் பார்க்க

தூதுவிடும் எடப்பாடி; மனம் மாறுகிறாரா விஜய்? - அதிமுக - தவெக கூட்டணி உருவாகிறதா?

'எடப்பாடி சூசகம்!'நாமக்கல்லின் குமாரப்பாளையத்தில் அதிமுகவின் பிரசாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் தவெக கொடியை பிடித்திருந்தவர்களை பார்த்து, 'கொடி பறக்குதா...அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும். பிள்ளைய... மேலும் பார்க்க

``கை என்றுமே நம்மை விட்டு விட்டுப் போகாது'' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் - மணமகள் பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின் திருமண நிகழ்ச... மேலும் பார்க்க

`இரும்பு இதயமும் துருபிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்

மூச்சு முட்டி நின்ற கரூர் இப்போதுதான் கொஞ்சமாக ஆசுவாசமடைந்திருக்கிறது. கண்ணீர்க் குரல்களின் அலறல் இப்போதுதான் கொஞ்சமேனும் ஓய்ந்திருக்கிறது. தமிழகமே பார்த்திராத பெருந்துயர் அது. ஆனால், அந்தப் பெருந்துய... மேலும் பார்க்க