உலகின் 8வது உயரமான சிகரத்தில் கால் வைத்த இந்தியர்; கின்னஸ் உலக சாதனை படைப்பாரா?
`இரும்பு இதயமும் துருபிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்
மூச்சு முட்டி நின்ற கரூர் இப்போதுதான் கொஞ்சமாக ஆசுவாசமடைந்திருக்கிறது. கண்ணீர்க் குரல்களின் அலறல் இப்போதுதான் கொஞ்சமேனும் ஓய்ந்திருக்கிறது. தமிழகமே பார்த்திராத பெருந்துயர் அது. ஆனால், அந்தப் பெருந்துயரத்திலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் நடந்திருந்தது.
அரசு இயந்திரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அத்தனை வேகமாகச் சுழன்றிருந்தது. விஷயம் தெரிந்த அடுத்த சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் நிற்கிறார். பக்கத்து ஊரிலிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பதறியடித்து ஓடி வந்து உயிரிழந்தவர்களைக் கண்டு நெஞ்சில் அடித்து அழுகிறார்.

ஒரு மணி நேரத்தில் முதல்வர் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்துகிறார். இரவோடு இரவாக கரூருக்கும் விரைகிறார். அத்தனை துரிதமாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது. துபாயிலிருந்த துணை முதல்வர் உடனடியாக வருகிறார். இதில் அரசியல் செய்ய வேண்டாமென முதலமைச்சர் ஸ்டாலின் அத்தனைத் தன்மையாகப் பேசுகிறார்.
ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பரிதவித்துப் போய் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றது. மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருக்கும் எந்த அரசும் இப்படியாகத்தான் செயல்படும். அந்த வகையில் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையாக இருந்தன.
ஆனால், கொஞ்சம் நிறுத்தி நிதானமாக யோசித்தால், கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த அரசு எந்தப் பிரச்னையில் இவ்வளவு வேகமாகச் செயல்பட்டது என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாமென முதல்வர் கூறுகிறார். ஆனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களைக் கூட்டி அத்தனைப் பிரச்னைகளுக்கும் விஜய்யும் தவெகவும் மட்டும்தான் காரணம் என்பதைப் போலப் பேசினாரே.
அதேமாதிரி, விளக்கம் கொடுக்கிறோம் என்ற பெயரில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வருவாய்த்துறை செயலாளரும், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யும் ஒரே தரப்பின் மீது பழியைச் சுமத்தி முடிவுரை எழுத நினைத்தார்களே?
இதன் மூலம் எதை நிறுவப் பார்க்கிறீர்கள் முதல்வரே? தமிழகக் காவல்துறை அத்தனைக் கட்டுக்கோப்பானது, காவல்துறை மீது இம்மியளவு கூட தவறில்லை எனக் கூற வருகிறீர்களா? அப்படியே இருக்கட்டும். கரூர் பிரச்னையைக் கொஞ்சம் ஓரமாக வையுங்கள். நாம் வேறு சில விஷயங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.

சாகச சோகம்
கடந்த ஆண்டு சென்னையில் படோபடமாக ஒரு விமான சாகச நிகழ்ச்சி நடந்ததே. நீங்களும் உங்களின் குடும்பத்தினரும் முதல் வரிசையில் அமர்ந்து புயலெனப் பறந்த விமானங்களைக் கண்டு கைத்தட்டி குதூகலித்துக் கொண்டிருந்தீர்களே.
நீங்கள் அண்ணாந்து பார்த்து வியப்படைந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, தண்ணீரின்றி 5 பேர் உயிரிழந்தார்களே. கரூர் நெரிசலுக்கும் இந்த விமான சாகச நெரிசலுக்கும் என்ன வித்தியாசம்? மக்கள் மூச்சு முட்டி சரிந்து விழுந்தபோது காவல்துறையின் உயர் அதிகாரிகள் சூழ முழு பாதுகாப்போடு நீங்களும் உங்களின் குடும்பத்தாரும் தானே அங்கே இருந்தீர்கள்?
அந்த இறப்புகளுக்கு யார் பொறுப்பு? கரூரில் உங்களின் காவல்துறை மீது எந்தக் குற்றமும் இல்லை. சரிதான், அப்படியே இருக்கட்டும். மெரினா பீச்சில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்துக்கும் உங்களின் அரசு நிர்வாகத்துக்கும் கூடவா சம்பந்தமில்லை?
சில வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டு வெள்ளோட்டமெல்லாம் நடத்தப்பட்டு விடுமுறை நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வுக்கு மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு வருவார்கள், அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென உங்களின் மூளையாகச் செயல்பட வேண்டிய உளவுத்துறை 'நோட்' போட்டுக் கொடுக்கவில்லையா? சரி, சம்பவம் நடந்துவிட்டது.
அங்கே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நீங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினீர்களா? கரூர் கூட்ட நெரிசல் உயிருக்கு ஒரு மதிப்பு? மெரினா கூட்ட நெரிசல் உயிருக்கு ஒரு மதிப்பா?
கரூருக்கு வெதும்பும் உங்களின் மனம் கள்ளக்குறிச்சியில் 64 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தபோது வெதும்பவில்லையா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறாரே? நியாயமான கேள்விதானே அது.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். அதுவே இந்த அரசாங்கத்துக்கு மிகப்பெரிய அவமானம். அங்கிருந்து உங்களின் இரும்புக்கரங்களைக் கொண்டு காவல்துறையையும் உளவுத்துறையையும் முறுக்கியிருந்தால் கூட, கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்திருக்காதே!

கள்ளச்சாராய மரணத்துக்கு வந்து துக்கவீட்டில் அங்கே கள்ளச்சாராயம் குடித்து அத்தனை பேர் இறந்த தமிழகம் பார்த்திடாத பேரழிவையெல்லாம் உங்களின் ஆட்சியில்தானே பார்த்தோம்! கரூருக்குச் சென்ற உங்களின் கால்கள் கள்ளக்குறிச்சிக்கும் சென்றிருக்க வேண்டுமல்லவா முதல்வரே?
உங்களின் கட்சி ஆட்கள் இப்போது உட்கார்ந்து கொண்டு, 'சாராயம் குடித்து இறந்தவன் வீட்டுக்கு முதல்வர் ஏன் செல்ல வேண்டுமெ'னப் பேசிக்கொண்டிருக்கிறார்களே? உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!
கள்ளச்சாராய இறப்புகளுக்கு அந்தக் குடும்பங்கள் மட்டும்தான் பொறுப்பேற்க வேண்டுமா? சமூக நீதி, திராவிட மாடல் எனப் பக்கம் பக்கமாக வசனம் பேசி விளிம்பு நிலை மக்களைக் கைத்தூக்கிவிட வந்த தேவதூதன் போல உங்களைச் சித்தரித்துக் கொள்கிறீர்கள்.
உங்களின் இதயத்திலிருந்து சொல்லுங்கள். கள்ளச்சாராய மரணங்களுக்கு இந்தச் சமூகமும் ஆளும் அரசும் கூட்டுப் பொறுப்பை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா?
இதெல்லாம் காவல்துறையைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த இடங்கள். இவை இல்லாமல் வேறு சில சம்பவங்கள் இருக்கின்றன. அதிலெல்லாம் காவல்துறையின் கொடிய கரங்கள் எந்தச் சட்டத்திட்டத்திற்கும் கட்டுப்படாமல் சாமானியர்கள் மீது பாய்ந்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்திருக்கின்றன.
சிவகங்கை மடப்புரம் அஜித் குமார் நினைவிருக்கிறதா? கட்டாயம் நினைவிருக்கும். காவல்துறையின் கோரக்கரங்களுக்குப் பலியான அந்த அஜித் குமாரின் அம்மாவிடம் குற்ற உணர்ச்சியின் சுவடே இல்லாமல், 'சாரிம்மா...' என்றீர்களே. சட்டப்பேரவை நடந்துகொண்டிருந்த சமயத்தில் சென்னையில் விக்னேஷ் என்கிற பையனை காவல்துறை லாக்கப்பில் வைத்தே அடித்துக் கொன்றார்களே.
கொலையுண்ட அதே கையோடு, 'அந்தப் பையன் வயிற்று வலியால் வாந்தி எடுத்து இறந்தான்' எனச் சட்டமன்றத்திலேயே உங்களைப் பேச வைத்தார்களே. காவல்துறை உங்கள் வழி பேச வைத்த அந்தப் பச்சைப் பொய் சட்டமன்றத்திலும் அறமற்று ஒலித்ததே அது நியாயமா? வெளியே எடுக்காமலேயே துருப்பிடிக்க நீங்கள் வைத்திருக்கும் அந்த இரும்புக்கரத்தை அப்போதாவது பயன்படுத்தியிருக்கலாமே.
அப்படிச் செய்திருந்தால் அஜித் குமாரைச் சித்ரவதை செய்வதற்கு முன்பாக அந்தக் காக்கிச்சட்டைகளின் கோரக்கரங்கள் கொஞ்சமேனும் தயங்கியிருக்குமே? சரி, அஜித் குமாரின் வீடு ஒன்றும் செல்ல முடியாத அளவுக்குத் தூரமில்லையே. ஒரு எட்டு சிவகங்கை வரைக்கும் சென்று வந்திருக்கலாமே? உங்களிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பது அதிகம்தான்.
ஏனெனில், திருநெல்வேலியில் கவின் குமார் ஆணவக்கொலை செய்யப்பட்டபோது தூத்துக்குடியில் இருந்தபோதுமே கூட நீங்கள் போனில் அழைத்துதானே பேசினீர்கள். போனில் பேசும்போது, 'அய்யா முதலமைச்சரே...' என அந்தக் குடும்பத்தினர் கதறுகிறார்கள், அப்போதும் கூட நேரில் சென்று ஆறுதல் கூறுவோம் என்கிற எண்ணம் உங்களுக்கு வரவில்லையே. கரங்கள் மட்டுமல்ல, உங்களின் இதயத்தையும் இரும்பில்தான் செய்திருப்பார்கள் போல. அந்த இதயம் எந்தக் கண்ணீருக்கும் மசியவில்லை ஏனோ?
காவல்துறை கட்டற்றுக் கிடக்கிறது. சரி, அந்தக் காவல்துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரிகளாவது சந்தோஷமாக இருக்கிறார்களா என்றால், அதுவும் கேள்விக்குறியே. எப்போதும் செய்தி சேனல்களைத்தான் பார்ப்பேன், அதிலும் அரசியல் செய்திகளைத்தான் பார்ப்பேன் என்று ஆர்வமாகச் சொல்கிற உங்களின் கண்களில் கண்டிப்பாக மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசன் பட்டிருப்பார்.
நேர்மையாக வேலை செய்ததால், சுற்றியிருக்கும் அதிகாரிகள் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். ஜீப்பைப் பிடுங்கிவிட்டு நடக்க விடுகிறார்கள். குறிப்பாக, அந்த இரண்டு அதிகாரிகள்தான் முதல்வரை ஏமாற்றுகிறார்கள் என்று தொப்பியைக் கழற்றிவிட்டு மனம் வருந்தி பேசினாரே. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் உங்களின் கண்களில் அந்தப் பேட்டியெல்லாம் படவே இல்லையா!
டி.ஜி.பி நியமனத்துக்காக யூ.பி.எஸ்.சி-க்கு அனுப்ப வேண்டிய பரிந்துரைப் பட்டியலைச் சரியான நேரத்துக்கு அனுப்பாமல், இப்போதும் பொறுப்பு டி.ஜி.பி-யை வைத்து வண்டியை ஓட்டுகிறீர்களே. சட்டம் ஒழுங்கு இருக்கிற நிலையில் இதையெல்லாம் தமிழ்நாடு தாங்குமா?

எப்போதுமே கலைஞர் செய்திகளையும் முரசொலியையும் மட்டுமே பார்க்காமல், வேறு சில சேனல்களையும் பத்திரிகைகளையும் பாருங்கள், முதல்வரே. அப்படிப் பார்த்திருந்தால், இன்னும் எத்தனையோ விஷயங்கள் உங்கள் கண்ணில் பட்டிருக்குமே! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று நீங்கள் பதவியேற்றபோது, 'சமூக நீதி', 'திராவிட மாடல்' என்று பெருமையாகப் பேசியபோது, நிஜமாகவே எல்லாருக்கும் உள்ளுக்குள் ஒரு நம்பிக்கை வந்தது.
இத்தனை வருட அரசியல் அனுபவம் மிக்கவர், நிர்வாகத்திறன் மிக்கவர், எல்லாவற்றுக்கும் மேல் இந்த மக்களுக்கான அரசியலைப் பேசுகிறார் என்று நிஜமாகவே நம்பினார்கள். ஆனால், உங்களின் ஆட்சியில் சமூக நீதி என்ற வார்த்தை மேலேயே அழிக்க முடியாத இரத்தக் கறை படியும் அளவுக்குச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
கவின் குமார் ஆணவக் கொலைக்கு தமிழகமே கொந்தளித்தது. இத்தனைக்கும், அது ஒன்றும் தமிழ்நாடு பார்த்த முதல் ஆணவக் கொலை இல்லை. முருகேசன் - கண்ணகி தொடங்கி உடுமலைப்பேட்டை சங்கர் வரைக்கும் எத்தனையோ ஆணவக் கொலைகள். சமூகத்தில் புரையோடியிருக்கும் அந்தக் கொடூர சாதிய மனோபாவத்தை ஒரே நாளில். யாராலும் மாற்றிவிட முடியாதுதான்.
ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் சாதிக்கு எதிராக ஒரு சமூகமாக ஒவ்வொரு அடியையும் நம்பிக்கையோடு எடுத்து வைத்திருக்கிருக்கும் விளிம்புநிலை மக்களுக்காக உங்கள் ஆட்சியில் நீங்களும் ஒரு அடியை முன்னெடுத்து வைப்பீர்கள் என்று நினைத்தார்கள். தேர்தலுக்கு முன் நீங்கள் சொன்னது போல 'ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம்' கொண்டு வருவீர்கள் என்று நம்பினார்கள்.
ஆனால் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி இது சம்பந்தமாக உங்கள் அரசை கேள்வி கேட்டபோது, 'ஆணவக் கொலைகளுக்குத் தனிச் சட்டம் தேவையில்லை' என்று நீங்களே சட்டமன்றத்தில் பதில் சொல்கிறீர்கள்.

நாங்குனேரி மாணவன் சின்னதுரையை சாதியின் பெயரால் வெட்டியபோது, நீதியரசர் சந்துரு தலைமையில் மாணவர்கள் மத்தியில் சாதியைக் களைய ஒரு குழு அமைத்தீர்களே. அந்த அறிக்கையை ஏன் அமல்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறீர்கள்? இதுதான் சமூக நீதியா? இதுதான் திராவிட மாடலா? உங்களுடைய கைகளில் ஆணவக் கொலைகளின் இரத்தக் கறை படிந்திருக்கிறது என்று உணர்கிறீர்களா, இல்லையா?
சமீபத்தில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று அரசு சார்பில் ஒரு விழா நடத்தினீர்கள். ரொம்பவே நெகிழ்ச்சியான விழா. ஒரு மாணவன் தன் அம்மா 'துப்புரவுப் பணி' செய்வதாகச் சொல்கிறான். உடனே அந்த வேகத்திலேயே மைக்கை வாங்கி, 'தம்பி, நம்ம ஆட்சியில் அவங்களைத் தூய்மைப் பணியாளர்கள் என்றுதான் அழைக்கணும்,' என்று பெருமிதம் பொங்க சொல்கிறீர்கள்.
அந்தக் காட்சியை மட்டும் பார்க்கிறவர்களுக்கு அப்படியே புல்லரித்துப் போய்விடும். ஆனால், அதற்கு முன்னால் நீங்கள் செய்ததைச் சொல்லவா? சென்னைக்கு நட்ட நடுவில் ஒய்யாரமாக நிற்கும் அந்த ரிப்பன் பில்டிங் முன்னால் 13 நாளாக இரவு பகலாக இதே தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டி போராடினார்கள்.
அப்போதெல்லாம் மைக்கை வாங்கி அவர்களின் குறை என்ன என்று கேட்க வேண்டும் என்று தோன்றவில்லையே ஏன்? துறைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு அமைச்சரை அனுப்பி, தடலாடியாகத்தானே பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்? 'முதலமைச்சரையே திட்டுவீர்களா?' என்று இருமாப்பாகத்தானே அந்த அமைச்சர் பேச்சுவார்த்தையை இடது கையால் தானே டீல் செய்தார்? மேலும் 'போராடும் பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு ரிப்பன் பில்டிங் கழிவறையைத் திறந்து வைத்ததைப் பெருமிதமாக உங்கள் அதிகாரிகள் பேசினார்களே... அதெல்லாம் உங்கள் காதுக்கு வந்து சேர்ந்ததா, இல்லையா?
வந்து சேர்ந்திருந்தாலும் உங்களுக்குத்தான் கேட்டிருக்காதே. ஏனெனில், நீங்கள்தான் அந்தப் பெண் தூய்மைப் பணியாளர்களின் சேலைகள் உருவப்பட்டு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட சமயத்தில் 'கூலி' படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தீர்களே. ரோம் பற்றியெரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பதை கதையாகத்தான் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள்தான் அந்தக் காட்சியை அப்படியே கண் முன்பு ஓட்டிக் காட்டினீர்கள்!

இத்தனைக்கும் அவர்கள் ஒன்றும் நீங்கள் சொல்லாததைக் கேட்கவில்லை. தேர்தல் அறிக்கை என அறிவாலயத்திலிருந்து நீங்கள் அச்சிட்டுக் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கேட்டார்கள். சொல்லாததையும் செய்வோம் என மார்தட்டுவீர்களே. முதலில் சொன்னதைச் செய்யுங்கள், முதல்வரே!
தூய்மைப் பணியாளர்கள் மட்டுமா? ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அரசின் இயங்கு சக்கரத்தின் அத்தனை மட்டத்தினரும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்றீர்கள். மறந்துவிட்டீர்கள்.
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்னை உட்பட எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்போம் என்றீர்கள். மறந்துவிட்டீர்கள்.
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்றீர்கள். மறந்துவிட்டீர்கள்.
அதேபோல அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக அமைச்சர்கள் மீது கட்டுக்கட்டாக ஊழல் புகார்களை எடுத்து சென்றீர்கள். சரி இன்று நீங்கள்தான் முதல்வர். அந்தப் புகார்களுக்கான நடவடிக்கைகள் எங்கே? அதையும் மறந்தே விட்டீர்கள்
இப்படி இன்னும்... இன்னும்... எவ்வளவோ!
முடிந்தால், நீங்கள் காற்றில் பறக்கவிட்ட வாக்குறுதிகளைத் தேடிக் கண்டுபிடித்து பட்டியலிட்டுக் கொடுக்க ஒரு தனி ஆணையம் அமையுங்கள்!
கம்யூனிஸ்டுகளின் கரம் பற்றி வென்றிருக்கிறீர்கள். ஆனால், சாம்சங் ஊழியர்கள் ஒரு தொழிற்சங்கம் அமைக்க எவ்வளவு போராட வேண்டியிருந்தது? என் பெயரும் ஸ்டாலின்தான் என்று கம்யூனிஸ மேடைகளில் பெருமிதம் பேசினால் மட்டும் போதுமா?

யாரைக் காப்பாற்ற இந்தப் பதட்டம் முதல்வரே?
சமீபத்தில் பிரமாண்டமாக ஒரு கல்வி விழாவை நடத்தினீர்கள். தமிழ்நாடு எப்போதுமே கல்வியைக் கொண்டாடியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அத்தனை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கிறதா? சைக்கிள், லேப்டாப் எல்லாம் அரசுப் பள்ளியில் படிக்கும் எளியப் பிள்ளைகளின் பெருங்கனவு.
அவை பெருமளவில் இடைநிற்றலைக் குறைத்தன. அந்தத் திட்டங்களை நிறுத்த எப்படி மனம் வந்தது? விமர்சனங்கள் எழக்கூடாது என்பதற்காக ஆட்சியின் நான்காம் ஆண்டு பட்ஜெட்டில் லேப்டாப் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறீர்கள். பள்ளிக்கூடங்களை தேர்தல் நாடகங்களை அரங்கேற்றும் இடமாக மாற்றாதீர்கள், முதல்வரே!
பள்ளிக்கல்வித்துறை மட்டுமா? இருக்கிற அத்தனை துறைகளிலும் அத்தனை ஓட்டைகள். எளிய மக்களின் வறுமையைப் பயன்படுத்தி கிட்னியைப் பிய்த்தெடுத்து கோடி கோடியாகக் கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல். இதே மாதிரி, ஒரு சம்பவம் நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது நடந்திருந்தால், சட்டையைக் கிழித்துக் கொண்டு வீதியில் இறங்கி ஒரு கை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது அதை விசாரிக்க நீதிமன்றம் தனியாக சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்கிறீர்களே! யாரைக் காப்பாற்ற இந்தப் பதட்டம் முதல்வரே?
சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராக பச்சைத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு விவசாயிகளின் உற்ற தோழனாக நின்ற அதே ஸ்டாலின் தான் இப்போது பரந்தூர் விமான நிலையத்துக்காக முப்போகம் விளையும் 13 கிராமங்களைக் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறார். இனியாவது அந்தப் பச்சைத் துண்டைக் கையில் எடுக்கையில் உள்ளுக்குள் கொஞ்சம் குத்தட்டும். இனியாவது தயவுகூர்ந்து விவசாயி வேடம் கட்டுவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள், முதல்வரே!
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என எதில்தான் இந்த ஆட்சி முழுமையாக இருக்கிறது? அண்ணா யூனிவர்சிட்டிக்குள் மாணவி வன்புணர்வு செய்யப்படுகிறார். காவலாக நிற்க வேண்டிய காக்கியே திருவண்ணாமலையில் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வன்புணர்வு செய்கிறது. தலைநகரின் முக்கியமான பகுதியில் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிச் சரிக்கப்படுகிறார். சட்ட ஒழுங்கு உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா, முதல்வரே, எங்களுக்கு நிஜமாகவே பயமாகத்தான் இருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது ஊர் ஊராக ஒரு பெட்டியை வைத்து குறைகளை எழுதிப் போடச் சொன்னீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அதையெல்லாம் தீர்த்து வைக்கிறேன் என்றீர்கள். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் ஊர் ஊராகப் பெட்டி வைக்கிறீர்கள். உங்களின் ஆட்சியில் குறைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லையே, முதல்வரே?
மகளிர் உரிமைத் தொகை கொடுத்தீர்கள். விடியல் பயணம் கொடுத்தீர்கள். எல்லாமே நல்ல திட்டங்கள். ஆனால், பதிலுக்கு உங்களின் அமைச்சர்கள் 'ஓசி பஸ்ஸு...' எனப் பழைய பண்ணையார்த்தனத்துடன் மக்களின் சுயமரியாதையை அல்லவா விலையாகக் கேட்கிறார்கள்! அதிலும் திராவிட இயக்க மேடையில்...
தேர்தல் வரப்போகிறது. இன்னும் 6 மாதங்கள்தான் இருக்கின்றன. ஊருக்குள் உயரமான பில்டிங்குகளில் எங்கே பார்த்தாலும் பேனர்களில் நீங்கள்தான் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். பேப்பரைத் திருப்பினால் முழு பக்கத்திலும் நீங்கள்தான் நிற்கிறீர்கள். நீங்களே அவ்வப்போது அப்பாவாக மாறி சிறப்பு வீடியோக்களையும் வெளியிடுகிறீர்கள். உங்களின் ஆட்சிக்கான விளம்பரங்கள் அத்தனையும் பளபளப்பாகத்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் வாழ்வில் அதற்கேற்ற நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருத்திறதா என்ற கேள்விக்கான பதிலை மக்களே உங்களுக்குச் சொல்வார்கள், முதல்வரே!