தெரு நாய் சுட்டுக்கொலை! விடியோ வைரலானதால் ஒருவர் கைது!
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பட்டப்பகலில் தெரு நாயை சுட்டுக்கொன்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஞ்சியின் தட்டிசில்வாய் பகுதியிலுள்ள சாலையில் பிரதீப் பாண்டே என்ற நபர் கையில் துப்பாக்கி ஏந்தியப்படி தனது நண்பர்களுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கிருந்த தெரு நாய்களில் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை அவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்பாவி ஜீவனை பிரதீப் சுட்டுக்கொன்ற சம்பவம் முழுவதும் அங்கிருந்தவர்களால் விடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த விடியோ இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பயணாளர்கள் அந்த விடியோவைப் பகிர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்ததுடன் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோது, அந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டு மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டதாகவும், பிரதீப்பின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் மீது குண்டு பாய்ந்து அவர்களது உயிருக்கு ஆபத்தாகியிருக்கக் கூடும் என அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் விடியோ வைரலானதினால் தட்டிசில்வாய் காவல் துறை உயர் அதிகாரி குற்றவாளியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டத்தைத் தொடர்ந்து பிரதீப்பை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த சில நாள்களாக அந்த நாய் வெறிப்பிடித்து அங்குள்ளவர்களைக் கடித்ததாகவும் இதனால்தான் அந்த நாயைக் கொன்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருப்பினும், இந்திய சட்டத்தின்படி தெரு நாயை கொல்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதினால் குற்றவாளிக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு இடமாற்றும் ஆப்பிள்!