தொடர் கனமழை: சென்னையில் 15 விமானங்கள் தாமதம்
சென்னை: சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு என வியாழக்கிழமை 15 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டிச.12-ஆம் தேதி சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், டிச.12- ஆம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க |டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகள்: பாதுகாப்பு முகமைகளுக்கு பெரும் சவால்- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
இந்த நிலையில், சென்னையில், புதன்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு என வியாழக்கிழமை 15 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
தொடா்ந்து மழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, துபை, அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர் உள்ளஇட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
தில்லி, மும்பை, திருச்சி, கோவை, கொச்சி புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
அதேபோன்று சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல், தொடா்ந்து வானில் வட்டமடித்து பறந்தன. மழை சற்று ஓய்ந்த பின்பு, இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
சென்னை வரும் விமானங்கள் அனைத்தும் பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை தாமதமாக தரையிறங்கின. இதனால் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 15 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.