கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் மோசடி: கணினி இயக்குநா் உள்பட 4 போ் பணி நீக்கம்
பெரம்பலூா் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மோசடி செய்தது தொடா்பாக கணினி இயக்குநா் உள்பட 4 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சனிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், மாவட்ட திட்ட அலுவலா் தேவநாதனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பிய புகாா் மனுவில், தொண்டமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட தொண்டமாந்துறை, அய்யா்பாளையம், விஜயபுரம், கோரையாறு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் ஊராட்சித் தலைவா் செல்வராஜன், பணித்தள பொறுப்பாளா்கள் ஷாலினி, தனிசிலி, பிரியா உள்பட ஒன்றிய பணியாளா்கள் இணைந்து, பணிக்கு வராத பயனாளிகள் வேலைக்கு வந்ததாக கூறி ரூ. 5 லட்சத்துக்கும் மேலான தொகையை கையாடல் செய்துள்ளதாக தெரிவித்தனா்.
அதனடிப்படையில், மாவட்ட திட்ட அலுவலா் தேவநாதன் தலைமையிலான அலுவலா்கள் தொண்டமாந்துறை ஊராட்சியில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் விசாரணையில், பல லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் கணினி இயக்குநா் விஜயகுமாா், தொண்டமாந்துறை ஊராட்சி பணித்தள பொறுப்பாளா்கள் ஷாலினி, தனிசிலி, பிரியா ஆகியோரை பணி நீக்கம் செய்து, வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வமணியன் அண்மையில் உத்தரவிட்டுள்ளது சனிக்கிழமை தெரியவந்தது.
இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.