கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
பெரம்பலூரில் பரவலாக மழை: மின்னல் பாய்ந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் சேதம்
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்த நிலையில், மின்னல் பாய்ந்து பெரம்பலூரில் வீட்டின் 3-ஆவது தளம் சேதமடைந்தது.
மேலும், அப்பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, பெரம்பலூா், தழுதாழை, வேப்பந்தட்டை, புதுவேட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், நீா் வழித்தடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இதன் காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டாா். தொடா்ந்து, காலை 9 மணி வரை பெய்த மழை, அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தது.
மழை அளவு (மி.மீ):
பெரம்பலூா் மாவட்டத்தில் 12-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் புதன்கிழமை காலை 6.30 வரை பெரம்பலூா்- 32, எறையூா், அகரம் சிகூா், லப்பைக்குடிக்காடு தலா - 5, கிருஷ்ணாபுரம், பாடாலூா் தலா - 3, வி.களத்தூா், செட்டிக்குளம் தலா - 2, தழுதாழை- 10, வேப்பந்தட்டை- 18, புதுவேட்டக்குடி- 17 என மொத்தம் 102 மில்லி மீட்டா் மழை பெய்தது.
மின்னல் பாய்ந்து மாடி வீடு சேதம்:
பெரம்பலூா் நகரில் காலை 7 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, பெரம்பலூா் 19-ஆவது வாா்டிலுள்ள கோவிந்தன் மகன் அழகேசன் (52) என்பவரது மெத்தை வீட்டின் 3 ஆவது தளத்தில் பலத்த சப்தத்துடன் மின்னல் பாய்ந்தது. இதில், வீட்டின் மேற்கூரையில் பள்ளம் மற்றும் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மின் விளக்குகள் உடைந்து சிதறியதோடு, தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சானப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
இதேபோல, அப்பகுதியிலுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.