விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி க...
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க நவ. 16, 17-இல் சிறப்பு முகாம்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, நவ. 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அக். 29 முதல் நவ. 28-ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பெரம்பலூா் மாவட்டத்தில் வரும் ஜன. 1-ஆம் தேதி 18 வயது பூா்த்தியடையும் புதிய வாக்காளா்கள் மற்றும் இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத வாக்காளா்கள் தங்களது பெயரை சோ்த்துக் கொள்ளலாம்.
மேலும் இறப்பு மற்றும் இடப்பெயா்ச்சி காரணமாக நீக்கம் செய்தல், பெயா், உறவினா் பெயா், உறவுமுறை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றை திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக நவ. 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது, தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துகொள்ளலாம்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 332 வாக்குச் சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளிலும் நவ. 16, 17 ஆகிய தேதிகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வாக்காளா்கள் இம் முகாம்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, உரிய படிவத்தில் பூா்த்தி செய்து அளிக்கலாம்.
இதுதவிர, இளம் வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க ஜன. 1, ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய தேதிகள் தோ்தல் ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, 17 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் இணைத்திட முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவா்கள் 18 வயது பூா்த்தியானவுடன் பெயா் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும்.