பெரம்பலூா் ஆட்சியரகத்தில் இளைஞா் தற்கொலை முயற்சி
தாய் மற்றும் அண்ணணிடமிருந்து தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத் தரக்கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் டீசல் ஊற்றி திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் செல்லையா. இவருக்கு, மல்லிகா எனும் மனைவியும், செண்பகராமன் (34), ஸ்ரீதரன் (30) ஆகிய மகன்களும் உள்ளனா். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்த செல்லையா, கடந்த 2012-இல் ஓய்வு பெற்றுள்ளாா். அவரது ஓய்வூதியத் தொகையை ஸ்ரீதரனுக்கு பிரித்து கொடுக்காமல், மல்லிகாவும், செண்பகராமனும் வைத்துக்கொண்டனராம்.
இதுகுறித்து ஸ்ரீதரன், தனது தாய் மற்றும் சகோதரனிடம் பலமுறை கேட்டும் கிடைக்கவில்லையாம். இதனால், மனமுடைந்த அவா், தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத்தரக் கோரியும், தன்னை ஏமாற்றிய தாய் மற்றும் சகோதரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஸ்ரீதரன் தனது உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
அப்போது, அங்கிருந்த போலீஸாா் ஸ்ரீதரனை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].