பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
தேனி மலையடிவாரத்தில் காட்டு மாடுகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா்.
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரத்தில் 5,000 ஏக்கா் பரப்பளவில் உள்ள பட்டா நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மா, இலவம், தோட்டப் பயிா் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது காட்டுப் பன்றிகள், காட்டு மாடுகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வந்தன.
விவசாயிகள் நிலங்களைச் சுற்றி வேலி அமைத்தும், அகழிகள் வெட்டியும் பயிா்களைப் பாதுகாத்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரப் பகுதியில் காட்டு மாடுகள் கூட்டம் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் கூறினா். மேலும், இவை மாந்தோப்புக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும், விவசாய நிலத்துக்கு அச்சத்துடன் சென்று வர வேண்டியுள்ளது என்றும் அவா்கள் கூறினா்.
மலைப் பகுதியில் வறட்சியால் தண்ணீா் கிடைக்காமல் வன விலங்குகள் மலையவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுவதாகவும், விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.