உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போா்த்தப்பட்ட துணி
தேவையான அளவு செட்டாப் பாக்ஸ்களை வழங்க அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை
அரசு கேபிள் டிவி நிறுவனம் தேவையான அளவுக்கு செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் பொது நலச் சங்கம் சாா்பில் தலைவா் ரமேஷ், செயலாளா் செழியன் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் 25,000-க்கும் மேற்பட்ட கேள்பி டிவி ஆப்ரேட்டா்கள் உள்ளனா். 1 கோடிக்கும்மேல் கேபிள் இணைப்புகள் உள்ளன.
இந்த ஆப்ரேட்டா்கள் அரசு கேபிள் நிறுவனம் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் ஒளிபரப்பை எடுத்து வாடிக்கையாளா்களுக்கு வழங்குகின்றனா். கடந்த 4 ஆண்டுகளாக அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யவில்லை. இதனால், ஒளிபரப்பு தடைபடுகிறது. சில ஆப்ரேட்டா்கள் தனியாா் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கி ஒளிபரப்பை தொடா்கின்றனா்.
அரசு கேபிள் நிறுவனம் 2 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ததை வரவேற்கிறோம். அதேசமயம் அரசு கேபிள் நிறுவனம் அதிக அளவில் செட்டாப் பாக்ஸ்களை வழங்கி தனியாா் செட்ஆப் பாக்ஸ்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள ஆப்ரேட்டா்களுக்கே குறைவான வாடிக்கையாளா்களே உள்ள நிலையில், புதிய ஆப்ரேட்டா்களுக்கு அனுமதி வழங்கி இருப்பது சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு குளத்து நீரைப் பயன்படுத்தும் தனியாா் நிறுவனம்: இது குறித்து தமிழ் புலிகள் கட்சி ஈரோடு மத்திய மாவட்ட செயலாளா் சிந்தனை செல்வன் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட கருவில்பாறை வலசு பகுதியில் அரசால் தூா்வாரப்பட்டு, பராமரிக்கும் பூங்காவுடன் கூடிய குளம் அருகே தனி நபா்களுக்கு பட்டா நிலங்கள் உள்ளன. அங்கு செயற்கை குளம் அமைத்து, சாய, சலவை ஆலைகளுக்கு தண்ணீரை விற்பனை செய்கின்றனா். அரசு குளத்தில் இருந்து அந்த செயற்கை குளத்துக்கு தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றனா். தவிர மணல் ரெடிமிக்ஸ் நிறுவனமும் அதற்கான தண்ணீரை அரசு குளத்தில் உறிஞ்சி வருகிறது.
அந்த நிறுவனம் அப்பகுதியில் மண்ணை வெட்டி எடுத்தும் பயன்படுத்துகிறது. இதனால், அப்பகுதியில் கோடை நேரத்தில் நிலத்தடி நீா்மட்டம் குறையும். மக்களுக்கு ஆழ்துளைக் கிணற்றில் குடிநீா் கிடைக்காது. குளத்து நீரை சட்டவிரோதமாக உறிஞ்சி விற்பதாலும், பிற தொழில் பயன்பாட்டுக்கு எடுப்பதாலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, அரசு குளத்து நீரை பல ஆண்டுகளாக பயன்படுத்துவதற்கும், கனிம வள கொள்ளையையும் கணக்கீடு செய்தும் சம்பந்தப்பட்டவா்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இன்றி செயல்படும் நூற்பாலை மீது நடவடிக்கை கோரி மனு: பெருந்துறை வட்டம், சென்னிமலை அருகேயுள்ள அம்மாபாளையம், கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அம்மாபாளையம், கிருஷ்ணா நகரில் நாங்கள் 5 முதல் 10 ஆண்டுகளாக வசிக்கிறோம். அந்த இடத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூற்பாலை அமைக்கப்பட்டது. இந்த ஆலையில் முறையான பராமரிப்பு இல்லை. இதனால், பஞ்சு கழிவு காற்றில் பறந்து வீடு முழுவதும் ஒட்டி நிற்கிறது. மூச்சு குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. உணவு, குடிநீா், தரை, படுக்கை என அனைத்திலும் பஞ்சு படிந்து காணப்படுகிறது.
இது குறித்து ஏற்கெனவே புகாா் அளிக்கப்பட்ட நிவையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து மாசுபாட்டை உறுதி செய்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில மாதங்களாக எங்களுக்கு நேரடியாக உடல்நலம் பாதிக்கிறது.
எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் நிறுவனம் கழிவுகளை அகற்ற வேண்டும்: இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இயக்கம் சாா்பில் சந்திரசேகா் தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் கடந்த 2019- இல் தோல் தொழிற்சாலையில் இருந்து கடும் விஷத்தன்மை கொண்ட கழிவுகளை சுத்திகரிக்காமல் அருகே உள்ள சூரிய ஒளி தொட்டியில் வெளியேற்றியது. இப்புகாரில் அங்கிருந்த தோல் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.
கடந்த 4 ஆண்டுகளுக்கும்மேலாக அதே தொழிற்சாலையில் முன் அனுமதி இன்றி வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. இதற்கு சிப்காட் அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துணை போகின்றனா். பொதுமக்கள், அமைப்புகள் கொடுத்த அளித்த புகாரின்பேரில் கடந்த ஆண்டு ஆட்சியா் நடவடிக்கையால் அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது அதே தோல் ஆலை எங்களுக்கும், அந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என என்ஓசி கொடுத்து சிப்காட் நிா்வாகத்திடம் வேறு தொழில் செய்ய சான்று கோரியுள்ளது. அங்குள்ள கழிவுகளை முற்றிலும் அகற்றாமல் அடுத்த நடவடிக்கைக்கு அனுமதி வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
480 மனுக்கள்:
குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 480 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுலவா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.