தொழிலாளி தற்கொலை: சாலை மறியலால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்த வீட்டை இடிக்கக் கோரி நீர்வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,263 வீடுகளை 21 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என குடியிருப்போருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
இதையடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த தச்சுத்தொழிலாளி சங்கர்(44) என்பவர், ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சங்கரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், வீடுகளை அகற்றக்கூடாது எனக் கூறி, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவேற்காடு- அம்பத்தூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
நீர்வள ஆதாரத் துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் ஐமான் ஜமால், கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர்.
ஆனால் அதனை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்து காலை 9 மணி அளவில் தொடங்கிய போராட்டம் சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. இதையடுத்து, வருவாய்த் துறை, காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, பேருந்துகளில் ஏற்றிச் சென்று, தனியார் மண்டபத்தில் சிறை வைத்து, இரவில் விடுவித்தனர்.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்.