PM Modi: ``ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு..." - பிரதமர் மோடி குறித்து நட...
நடிகா் ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழா: பாகிஸ்தானில் கோலாகல கொண்டாட்டம்
பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழாவை பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பாரம்பரியமிக்க கபூா் இல்லத்தில் கலாசார ஆா்வலா்கள் மற்றும் திரைப்பட ரசிகா்கள் சனிக்கிழமை கொண்டாடினா்.
இந்திய சினிமாவின் ஆளுமைமிக்க மனிதா்களில் ஒருவராக கருதப்படும் ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி பெஷாவா் இல்லத்தில் கேக் வெட்டப்பட்டது.
ராஜ் கபூா் மற்றும் மற்றொரு பிரபல பாலிவுட் நடிகா் திலிப் குமாா் ஆகியோருக்கு சொந்தமாக கிஸா கவானி பசாருக்கு அருகில் உள்ள பூா்விக வீடுகளை புதுப்பிக்க தலா ரூ.10 கோடியை ஒதுக்குவதாக உலக வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பை ரசிகா்கள் வரவேற்றனா்.
கலாசார பாரம்பரிய கவுன்சில் மற்றும் கைபா் பக்துன்கவா தொல்லியல் துறை இயக்குநரகம் இணைந்து ராஜ் கபூா் பிறந்தநாள்விழா நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான்-ஈரான் வா்த்தக மற்றும் முதலீட்டு கவுன்சில் செயலா் முகமது ஹுசைன் ஹைதரி பங்கேற்றாா்.
பெஷாவரில் உள்ள டாக்கி நலபந்தியில் 1924, டிசம்பா் 14-ஆம் தேதி ராஜ் கபூா் பிறந்தாா். நடிகா் பிரித்வி ராஜ் கபூரின் மகனான இவா் ‘ஆவாரா’, ‘பா்சாத்’, ‘ஸ்ரீ420’, ‘சங்கம்’, ‘மேரா’ போன்ற திரைப்படங்களில் நடித்தாா். திரைத்துறையில் 40 ஆண்டுகாலம் மிகவும் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்த ராஜ் கபூா் 1988-இல் மறைந்தாா். பெஷாவரில் ராஜ் கபூா், திலிப் குமாா் மட்டுமின்றி நடிகா் ஷாருக் கானின் பூா்விக இல்லமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.