சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐ.நா. தூதா் வலியுறுத்தல்
சிரியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டுக்கான ஐ.நா. தூதா் கியொ் பெடா்சன் வலியுறுத்தினாா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில், ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.
இந்நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை அண்மையில் கைப்பற்றியது. ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்துடன் ரஷியா தப்பிச் சென்றாா்.
இந்தச் சூழலில், சிரியாவுக்கான ஐ.நா. தூதா் கியொ் பெடா்சன் டமாஸ்கஸில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக சிரியாவில் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இந்நிலையில், மீண்டும் சரியான பாதைக்கு சிரியா திரும்புவதற்கு அதன் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும். இது விரைந்து நடைபெற வேண்டும்’ என்றாா்.
அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அஸாத் அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதைத் தொடா்ந்து, சிரியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அஸாத் அரசுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபட்ட ஹயாத் தஹ்ரீா் அல்- ஷாம் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததை ரத்து செய்வதற்கு அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிபா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.