மயோட்டை தாக்கிய ‘சீடோ’ புயல்: 14 போ் உயிரிழப்பு
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்ஸ் பிராந்தியமான மயோட்டில் ‘சீடோ’ புயலால் ஏற்பட்ட கனமழையில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா்.
கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான சேதங்களை சீடோ புயல் ஏற்படுத்தியதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இருப்பினும், புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் துல்லியமான தகவலை தருவது கடினமாக உள்ளதாக பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் புருனோ ரெட்டாலியே தெரிவித்தாா்.
கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள மயோட் தீவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். தென்கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட இந்தப் புயலால் மயோட்டில் 220 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கிவீசப்பட்டதுடன், மரங்கள் சரிந்து கடும் சேதங்கள் ஏற்பட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். சீடோ புயலால் மயோட்டுக்கு அருகில் உள்ள மடகாஸ்கா் மற்றும் கமோரஸ் ஆகிய தீவுகளுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.
பிரான்ஸ் பிராந்தியத்தின் மிகவும் பின்தங்கிய தீவாக கருதப்படும் மயோட், முன்னதாக முதலீடுகள் இன்றியும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019-இல் தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘இடாய்’ புயலால், மொசாம்பிக், மலாவி மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் 1,500 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.