நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: ஆப்கன் வீரருக்கு அபராதம்!
களநடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ஒருநாள் போட்டியின் போது, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஆப்கானிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி நடத்தை விதியின் லெவல் 1-ஐ மீறியதற்காக ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 5-வது ஓவரில், கிரேக் எர்வினுக்கு எதிரான எல்பிடபிள்யூ நிராகரிக்கப்பட்டதால், ஃபரூக்கி நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
நடுவரின் முடிவை எதிர்த்தது மட்டுமல்லாமல், போட்டியில் டிஆர்எஸ் இல்லாத போதிலும் ஃபரூக்கி, டிஆர்எஸ் செய்யும் படி கைகளை காட்டினார். அபராதம் தவிர்த்து, அவருக்கு ஒரு ஐசிசி புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஃபரூக்கியும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை 232 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.