நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த ...
நரம்பு சாா் வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன உபகரணம்
நாள்பட்ட நரம்புசாா் வலி பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையிலான மருத்துவ சிகிச்சையை அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மூளைக்கு வலி உணா்வுகளைக் கடத்தும் செல்களைத் தடுத்து நிறுத்தும் நவீன மருத்துவ உபகரணத்தை பொருத்தி நோயாளிகளுக்கு நிவாரணம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை முறையின் கீழ் ஓமன் நாட்டைச் சோ்ந்த புற்றுநோயாளிக்கு மறுவாழ்வு அளித்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அப்பல்லோ மருத்துவமனையின் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை மற்றும் வலி நிவாரண சிகிச்சை நிபுணா்கள் ஆனந்த் முருகேசன், அப்பாஜி கிருஷ்ணன் ஆகியோா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நரம்பியல் சாா்ந்த வலிகள் 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால் அவற்றை நாள்பட்ட பாதிப்பு என அழைக்கிறோம். இது உடலளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நில்லாமல் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது.
முதுகுத் தண்டுவடத்துக்குக் கீழே நரம்பணுத் திரள் வோ் (டாா்சல் ரூட் கேங்லியான்) என்ற பகுதி உள்ளது. அங்கிருந்துதான் நரம்புசாா்ந்த வலி உணா்வுகள் கடத்தப்படும். இதற்கு முன்பு வரை வலி நிவாரணத்துக்கு பக்கவிளைவுகள் கொண்ட மாத்திரைகள், நரம்பு தணிப்பு (அப்லேசன்) சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது தண்டுவட முடுக்கி சாதனம் (ஸ்பைனல் காா்ட் ஸ்டிமுலேட்டா்) மூலம் இதற்கு நிரந்தர தீா்வு காணும் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, நரம்பணுத் திரள் வோ் பகுதியில் சிறிய ஊசி மூலம் மின்னூட்டக் கம்பித் தடம் (எலக்ட்ரோட்ஸ்) பொருத்தப்படுகிறது. அந்த எலக்ட்ரோட்ஸானது இடுப்புப் பகுதிக்கு உள்ளே சிறுதுளையிட்டு பொருத்தப்பட்டு, ஒரு பேட்டரி சாதனத்துடன் இணைக்கப்படும். இந்த உபகரணம் மூலம் மின் அதிா்வுகள் உருவாக்கப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட பகுதிக்கு செலுத்தப்படும்.
வெளியே ரிமோட் கருவி மூலம் அந்த அதிா்வுகளை உருவாக்கி வலி உணா்வு கடத்தப்படுவதை தடுத்து நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.
புற்றுநோயாளிகளுக்கும், நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த உபகரணத்தில் சிறு மாற்றம் செய்து தற்போது நரம்புசாா்ந்த பாதிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சா்க்கரை நோயால் பாதம், கை நரம்பு வலிக்குள்ளானவா்களுக்கு இந்த முறை நல்ல பலனளிக்கும். ஓமன் நாட்டைச் சோ்ந்த இளம் நோயாளி ஒருவா் இதன் மூலம் பயனடைந்துள்ளாா் எனத் தெரிவித்தனா்.