வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி உயிரிழப்பு
உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னா் வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி புதன்கிழமை உயிரிழந்தது.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்கள் கடித்ததால், பலத்த காயமடைந்த பெண் குரங்கு குட்டியை கால்நடை மருத்துவா் வல்லயப்பன் மீட்டு சிகிச்சை அளித்து வந்தாா். 10 மாத கால சிகிச்சைக்குப் பின்னா் அந்தக் குரங்கு குட்டி வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்காவில் விடப்பட்டது. குரங்கு குட்டியை மீண்டும் தன்னிடமே ஒப்படைக்கும்படி, மருத்துவா் வல்லயப்பன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உயா் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குரங்கு குட்டி உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்ததாக வண்டலூா் பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புக்கு காரணம்: இது குறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
கடந்த அக்.26-ஆம் தேதி வண்டலூா் பூங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் குரங்கு குட்டிக்கு வனவிலங்கு மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொண்டதில், குரங்கு குட்டியின் பின் மூட்டு முடக்கம் மற்றும் அதன் முதுகில் சிராய்ப்பு காயம் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் குரங்குக்கு மிதமான ரத்தசோகை இருப்பது தெரியவந்தது.
குரங்கின் காயத்தை குணப்படுத்துவும், சிராய்ப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் பொருத்தமான படுக்கை உட்பட பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பூங்காவின் வனவிலங்கு மருத்துவக் குழுவின் கண்காணிக்கப்பின் கீழ், குரங்கு குட்டிக்கு தேவையான மருந்துகளுடன் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. குரங்கின் உடல்நிலை படிப்படியாகக் குணமடைந்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக சோா்வாகக் காணப்பட்டது.
அதைத் தொடா்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிபுணா்களின் ஆலோசனைகளின் படி, குரங்குக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பெண் குரங்கு குட்டி புதன்கிழமை உயிரிழந்துவிட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.