சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ. 10 கோடியில் புதுப்பிப்பு: அமைச்சா்கள் ஆய்வு
சேத்துப்பட்டு பசுமை பூங்காவை ரூ. 10 கோடியில் மேம்படுத்துவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொளத்தூா், ஜமாலியா மற்றும் ராஜாதோட்டம் பகுதியில் இருந்த குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜமாலியா பகுதியில் புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் தை மாதத்தில் பயனாளா்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடசென்னை வளா்ச்சி திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 2025 டிசம்பா் மாதத்துக்குள் 200 பணிகள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நவ.30-ஆம் தேதி வடசென்னையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா் என்றாா் அவா்.
தொடா்ந்து, சேத்துப்பட்டு பசுமை பூங்காவை ரூ.10 கோடி மதிப்பில் மேம்படுத்துவது குறித்து அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மை செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.