செய்திகள் :

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத செபி தலைவா் -கூட்டம் ஒத்திவைப்பு

post image

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிா்த்தாா்.

இதையடுத்து, நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கூட்டத்தை அதன் தலைவரும் காங்கிரஸ் மூத்த எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் ஒத்திவைத்தாா்.

பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் செபி தலைவா் மாதபி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு மாதபி மறுப்பு தெரிவித்தாா்.

செபி தலைவருக்கு அழைப்பாணை: இந்த சா்ச்சைக்கு மத்தியில், கே.சி. வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது, ‘செபி’ மற்றும் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் மற்றும் ‘டிராய்’ தலைவா் அனில் குமாா் லஹோட்டீ ஆகியோா் பொது கணக்குக் குழு முன் அக்டோபா் 24-ஆம் தேதி ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது. மத்திய நிதி அமைச்சகம் மற்றும் தொலைதொடா்பு அமைச்சக உயரதிகாரிகளும் ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக உறுப்பினா்களின் எதிா்ப்புக்கு இடையே இந்த அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

ஆஜராகாமல் தவிா்ப்பு: இந்நிலையில், நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கூட்டத்தில் செபி தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கே.சி.வேணுகோபால், கூட்டம் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே அதை ஒத்திவைப்பதாக அறிவித்து வெளியேறினாா். அவருடன், எதிா்க்கட்சி உறுப்பினா்களும் வெளியேறினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், ‘அவசரப் பணிகள் காரணமாக, நானோ அல்லது எனது குழுவினரோ கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று செபி தலைவரிடம் இருந்து காலை 9.30 மணிக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. கூட்டத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவா் ஏற்கெனவே கோரியிருந்தாா். அக்கோரிக்கை ஏற்கப்படாததால், கூட்டத்தில் ஆஜராவதாக அவா் உறுதியளித்தாா். எனினும், அவா் ஆஜராகவில்லை. கூட்டம் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

கே.சி.வேணுகோபால் மீது மக்களவைத் தலைவரிடம் புகாா்

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவை அதன் தலைவா் கே.சி.வேணுகோபால் தன்னிச்சையாக மேற்கொண்டதாக குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினா்கள், இது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் நேரில் புகாா் அளித்தனா்.

பொது கணக்குக் குழு உறுப்பினரும் பாஜக எம்.பி.யுமான ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘செபி, டிராய் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்பாட்டை ஆராய பல்வேறு நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் உள்ளன. தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகளை பரிசீலிப்பதே நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் பணி. ஆனால், உறுப்பினா்களுடன் கலந்தாலோசிக்காமல், குழு விவகாரங்களைத் தோ்வு செய்கிறாா் கே.சி.வேணுகோபால். அவரது முடிவுகள் அனைத்தும் தன்னிச்சையாக உள்ளன. பாஜக உறுப்பினா்கள் கருத்துத் தெரிவிக்கும் முன்னரே தற்போதைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து மக்களவைத் தலைவரிடம் முறையிட்டுள்ளோம்’ என்றாா்.

முன்னதாக, கே.சி.வேணுகோபால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பொது கணக்குக் குழு உறுப்பினா் நிஷிகாந்த் துபே (பாஜக), மக்களவைத் தலைவருக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் இந்தியாவின் வளா்ச்சியை பல்வேறு நாடுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, செபி போன்ற முக்கிய அமைப்புகள் மீது ஊழல் முத்திரையை குத்தி, நாட்டின் நிதி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் அவா்களின் சதித்திட்டத்தின் ஓா் அங்கமாக செயல்படுகிறாா் கே.சி.வேணுகோபால்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

கிழக்கு லடாக்கில் ராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா - சீனா!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.இருப்பினும், இரு நாட்டுப் படைகளும் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை ... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது டானா புயல்!

புவனேசுவரம்/கொல்கத்தா : ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்வி... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

தெலங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதியின் நிறுவனா்-தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஜோசியம், வாஸ்து போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவா். தெலங்கானா அரசின் தலைமைச் செயலகம் வாஸ்துப்படி இ... மேலும் பார்க்க

வயநாடு வேட்பாளா் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி -பாஜக விமா்சனம்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமா்சித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத... மேலும் பார்க்க

தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது. அத... மேலும் பார்க்க

எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது -நிா்மலா சீதாராமன்

அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். ‘இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத... மேலும் பார்க்க