அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தடம் பதித்தவர் மன்மோகன் சிங்: சித்தராமையா
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92)உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மன்மோகன் சிங் மிகவும் மரியாதைக்குரிய மனிதர். எளிமையான, நேர்மையான அரசியல்வாதி. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை மாற்றியமைத்தவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அவரின் வாழ்க்கை ஒருவிதத்தில் அதிசயம்தான். பாகிஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த அவர், உலகின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த அவர், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் மூலம், நாடு எதிர்கொண்டிருந்த நிதி நெருக்கடியைத் தீர்த்து வைத்தவர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராகத் தேர்ந்தெடுத்தார். பத்தாண்டுக் காலம் வகித்த பொறுப்பை, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாட்டை உயர்த்தினார்.
நாடு கண்ட நேர்மையான பிரதமர்களின் அவரும் ஒருவர். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தடம் பதித்தவர். நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் அவரது வாழ்க்கையும் பணியும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம்.
ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார், மேலும் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, கர்நாடகத்தில் ஏழைகளுக்கு ரூ. 1-க்கு அரிசி வழங்கப்பட்டது. இன்று மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்குகிறது என்றால் அதற்குக் காரணம் மன்மோகன் சிங் தான். இவர் பிரதமராக இருந்த காலத்தில் ஏழைகளை மனதில் வைத்து பணியாற்றினார்.
அவர் ஒருபோதும் அதிகார போதையில் இருந்ததில்லை. அவர் ஒரு எளிய பண்புள்ள, நேர்மையான அரசியல்வாதி. மிகவும் மரியாதைக்குரிய மனிதர். அரசியலில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்தவர். அவரது மறைவு இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு.
மேன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.