பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
`` நான் டைரக்ஷன் பக்கம் வரவேண்டும் என பாலா சார்..." - இயக்குநராக அறிமுகமாவது குறித்து வரலட்சுமி
கூடிய விரைவில் இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி. அவர் இயக்கும் திரைப்படத்திற்கு `சரஸ்வதி' எனப் பெயரிட்டிருக்கிறார்.
இயக்குவதோடு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, நவீன் சந்திரா ஆகியோரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து வரலட்சுமியே தயாரிக்கவும் இருக்கிறார்.
தற்போது இத்திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் வரலட்சுமி பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "பாலா சார், நீண்ட காலமாக நான் இயக்குநராக வர வேண்டும் என்று காத்திருந்தார். அவர் என்னிடம், ‘நீ நடிப்பில் என்ன செய்கிறாய் என்று தெரியவில்லை. நீ இயக்கத்திற்கு வர வேண்டும்’ என்று சொல்லுவார்.
அவர் எனது முதல் குரு. டைரக்ஷன் ஐடியாவைப் பற்றி நான் அவரிடம் சொன்னபோது, நான் திருமணம் செய்துகொண்டபோது இருந்ததை விட அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை நான் கேட்டேன். அதிலிருந்து அது என் மனதில் இருந்து வந்தது. ஆனால், கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாகவே இதை இயக்க முடிவு செய்தேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அதே திரைக்கதையைப் பயன்படுத்தவில்லை.

நான் அதில் நிறைய மாற்றங்கள் செய்தேன். ஒரு குறிப்பிட்ட வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத் தேர்ந்தெடுத்து மேலும் விரிவாக்கினேன். சீனியர் நடிகர்களுக்கு கதை சொல்லும்போது, அவர்கள் கதையை சுவாரசியமாகக் கேட்டது ஒரு நல்ல உணர்வு.
அப்போதுதான் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பது தெரியும். அவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்திருப்பது எனக்கு கௌரவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இன்னும் சில நடிகர்களை பின்னர் வெளியிட உள்ளோம். இந்த கதாபாத்திரங்களுக்கு இந்த நடிகர்கள் தேவைப்பட்டார்கள். நல்ல நடிகர்கள் சிறப்பாக நடிக்கும்போது ஒரு இயக்குநராக எனது பணியில் 80% முடிந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்," என்று முடித்துக் கொண்டார்.