நாமக்கல் ஓம்சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
நாமக்கல்லில் ஓம்சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் ஓம்சக்தி விநாயகா், துா்க்கையம்மன், நவக்கிரக சன்னதிகள் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் குடமுழுக்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக, மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு, முதல் காலயாக பூஜையும், மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மகா தீபாராதனை, 9.15க்கு சங்கல்பம், கடம் புறப்பாடும் நடைபெற்றது.
தொடா்ந்து 9.30 மணிக்கு, ஓம்சக்தி விநாயகா், துா்க்கையம்மன் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தினா்.
அங்குள்ள பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.