நாளை தவெக ஆண்டு விழா: ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நாளை(பிப். 25) நடைபெறவுள்ள நிலையில், மாமல்லபுரம் பூஞ்சேரியில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தவெக மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் மேடையிலே அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதற்கான பணிகளை கட்சியின் தலைமைக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் கூட்டணி தொடர்பாகவும் தவெக தலைவர் விஜய் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நாளை நடைபெறுகிறது.
இதையும் படிக்க: கும்பமேளா நாளையுடன் நிறைவு! கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!
இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சி நிா்வாகிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கான பாதைகள், வாகனக்கள் நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விஜய் வந்து செல்வதற்கான பாதை, சுமாா் 2000 பேருக்கு சைவ, அசைவ உணவு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தவெகவின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.