International Day for Violence against Women: `இனி மன்னிப்பதற்கில்லை' - ஐ.நா. சொ...
``நிறைய பேர் அப்பா வாய்ஸை AI பண்ணலாமான்னு கேட்குறாங்க... ஆனா!'' - எஸ்பிபி சரண்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ `சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4'. இந்த சீசனின் நடுவர்களுள் ஒருவர் எஸ்பிபி சரண். சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சந்தித்துப் பேசினோம்.
"நான் ரொம்ப லக்கின்னு நினைக்கிறேன் எனக்கு ஏனோ சின்னப் பசங்களுக்கான நடுவராகத்தான் போறேன். நாம கஷ்டம்னு நினைக்கிற நிறையப் பாடல்களை குழந்தைங்க எடுத்து சூப்பரா பாடுறாங்க. அது நமக்கு இன்ஸ்பயர் ஆக இருக்கு. தொடர்ந்து நாமளும் அப்படியான பாடல்கள் பாடணுங்கிற உணர்வு ஏற்படுது. குழந்தைங்ககிட்ட நிறைய கதைகள் இருக்கு. அவங்க வயசு, சைசுலாம் மீறி பெர்ஃபார்ம் பண்றாங்க. அவங்க பாடுறதைக் கேட்டுட்டு என்ஜாய் பண்ணாம இருக்க முடியாது.
இங்க ஒரு பையனுக்கு பேசுறப்ப திக்குது அவனால தொடர்ந்து பேசவே முடியல ஆனா பாடுறப்ப அந்தப் பிரச்னையே இல்ல. நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நீ அதுக்கு பாட்டாவே பதில் சொல்லுன்னு சொல்லி அவனை ட்ரை பண்ண சொன்னப்ப அவன் பாட்டு மூலமா அழகா பதில் சொல்றான்.
நான் முறையா சங்கீதம் கத்துக்கல. எனக்கு கேள்வி ஞானம் தான். அதனால குழந்தைங்க பாடும் போது அவங்களுக்குப் புரியுற மாதிரி பிழைகளை சுட்டிக்காட்டி அவங்களை வழிநடத்திட்டு அந்த நிகழ்ச்சியை செமயா என்ஜாய் பண்ணிட்டிருக்கேன்!" என்றவரிடம் எஸ்பிபி குரலில் மனசிலாயோ பாட்டு வந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்னு பலர் சொன்னாங்க. AI குரலில் அவரது குரலை கேட்க வாய்ப்பிருக்கிறதா? எனக் கேட்டோம்.
"ஒவ்வொரு பாடகர்களும் பல ஆயிரம் பாடல்களைப் பாடிட்டாங்க. அவங்களை அப்படியே விட்றணும். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகையில் இப்பவும் மக்கள் மனசுல இருக்கு. அப்படி ஒரு சிங்கர் இருந்தாங்க, என்ன மாதிரியான பாடல்கள் எல்லாம் பாடியிருக்காங்க அப்படின்னு இருக்கணும். மனசிலாயோ நல்ல பாட்டு தான். ஆனா, AIல எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு டெக்னாலஜி கையில் இருக்கிறதனால எதுனாலும் பண்ணலாமா? தப்பா எடுத்துக்க வேண்டாம் இப்ப எஸ்பிபி இருந்திருந்தால் ஒருவேளை இந்தப் பாட்டு கேட்டுட்டு இந்தப் பாட்டு வேண்டாமே நான் பாட மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். இந்தப் பாட்டு நான் பாடுறேன், பாடலைங்கிற முடிவை பாடகர்கள் எடுப்பாங்க.
AI அந்த வாய்ப்பை கொடுக்காது. நம்ம அவங்க மேல உள்ள அன்பால எல்லா பாட்டும் அவங்க பாடினா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். அந்தக் குரலை கொண்டு வந்திடலாம். ஆனா, எமோஷனஸை கொண்டு வர முடியாது. நிறைய பேர் அப்பா வாய்ஸை AI பண்ணலாமான்னு கேட்கிறாங்க. நான் நோ சொல்லிடுறேன். ரெஸ்பான்சிபிள் ஆன மியூசிக் டைரக்டர் ஆக இருந்தா கூட நான் நோ சொல்லிடுறேன். அவருடைய குரல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துட்டே இருக்கணும். அந்த உணர்வு இருக்கணும்னு நாங்க விரும்புறோம்!" என்றார்.
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் குறித்தும் எஸ்பிபி சரண் அவர்களின் பேட்டியைக் காணவும் லிங்கை கிளிக் செய்யவும்!