``ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்'' -EB பெயரில் மோசடி; வீ...
BB Tamil 8 Day 49: யாருடைய ஆட்டம் முடிந்து விட்டது?; சாச்சனாவின் சிரிப்பு - விசேவின் கடுப்பு
இன்றைய எபிசோடின் இறுதியில் வெளிப்பட்ட டிவிஸ்ட் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சரியான சமயத்தில் செய்யப்பட்ட மாஸ்டர் மூவ். ‘கோதாவரி .. வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி’ என்று பிக் பாஸ் போட்ட கோடு இன்று அழிக்கப்பட்டது.
இனி எல்லைக்கோடு பிரச்னையில்லை. தனித்தனியான அணியில்லை. ஒவ்வொவரும் தங்களின் தனித்தன்மையைக் காட்டியே ஆக வேண்டும். யாரும் யாரின் பின்னாலும் ஒளிந்து நிற்க முடியாது.
இனியாவது இந்த எட்டாவது சீசன், ஏழரையிலிருந்து நகர்ந்து சுவாரசியமாக மாறுமா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 49
அரங்கத்திற்கு வந்த வந்த விசே. “நூறு நாள் என்பது இந்த ஆட்டத்தின் இலக்கு. பாதியைக் கடந்து விட்டோம். இதுவரை யார் நல்லா விளையாடினாங்க. யார் விளையாடலை.. அவங்க கிட்டயே விசாரிப்போம்.. வாங்க” என்றபடி உள்ளே சென்றார்.
“இது ஐம்பதாவது எபிசோடு.. வாழ்த்துகள்..” என்ற விசே, இன்று ராணவ்வின் பிறந்த நாள் என்பதை அறிந்து அவரை வாழ்த்தினார். விஷாலும் ஜெப்ரியும் ஒரு பாடலைப் பாடினார்கள். ‘டாஸ்க்கு கொடுத்தா அழுவுது..’ என்று ஆறு வாரங்களை வைத்து புனையப்பட்ட அந்தப் பாடல் நன்றாக இருந்தது.
அடுத்ததாக ஒரு டாஸ்க். ‘யாருடைய ஆட்டம் இத்தனையாவது நாளோடு முடிந்து விட்டது. அதன் பிறகு சுவாரசியமில்லை’ என்பதைக் குறிப்பிட்டு ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். “வர்ஷினியின் ஆட்டம் ஏழே நாளில் முடிந்து விட்டது” என்று சொல்லி இந்த டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார் தீபக். “ஆரம்ப இரண்டு வாரங்களில் கிடைத்த தாக்கத்தை வைத்துதான் சவுந்தர்யா இன்னமும் தொடர்கிறார்” என்று மஞ்சரி சொன்ன ஸ்டேட்மென்ட் முரணானது. ஆரம்ப இரண்டு வாரங்களில்தான் சவுண்டு டொங்கலாக இருந்தார். பிறகுதான் பிக்கப் ஆனார். இதைப் பிறகு சவுந்தர்யாவே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்
‘யாருடைய ஆட்டம் முடிந்து விட்டது?’
‘சம்மந்தி பிரச்னைக்குப் பின் அன்ஷிதாவை எங்குமே பார்க்க முடியவில்லை” என்று முத்து சொன்னது சரியான அப்சர்வேஷன். அர்ணவ் எலிமினேட் ஆனதிலிருந்தே அன்ஷிதா இந்த ஆட்டத்திலிருந்து டிஸ்கனெக்ட் ஆகி விட்டார். கேள்வியைப் புரிந்து கொள்ளாமல் வர்ஷினி பதிலளிக்க “இந்த மாதிரி பண்ணா.. எப்படி பண்றது?” என்று வழக்கம் போல் கூட்டத்தைப் பார்த்து சிரித்தார் விசே.
டாஸ்க்கின் முடிவில் அதிகமான சீட்டுக்களைப் பெற்றவர்கள் ரஞ்சித், அன்ஷிதா மற்றும் தர்ஷிகா. “இதை நான் பாசிட்டிவ்வா பார்க்கறேன்” என்று ரஞ்சித் சொல்ல, விசே சட்டென்று சிரித்து விட்டார். “இல்ல சார்.. இனிமே என்னை மாத்திக்கறதுக்கு இது உதவும்” என்கிற மாதிரி ரஞ்சித் சமாளித்தார். “எங்க பேசணுமா.. அங்க பேசியிருக்கேன். மத்தபடி வம்படியா போய் பேசறது என்னோட இயல்பு கிடையாது” என்றார் அன்ஷிதா. “அதுவா அமையறதுதான். ஒரு நாள் சிறப்பா இருக்கும். இந்த கிராஃப் மாறிட்டே இருக்கும்” என்றார் தர்ஷிகா.
“காமெடியை வெச்சு காலம் தள்றதா சொல்றாங்க.. என் இயல்பே அதுதான். இதுதான் நான்” என்று விஷால் விளக்கமளிக்க “இதையே சொல்லி காலத்தை ஓட்ட முடியாது. அதுல இருந்து வெளியே வரணும். உங்களை நீங்களே அனலைஸ் பண்ணுங்க” என்ற விசே, விஷால் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார்.
என்னுடைய கணிப்பின் படி ரஞ்சித், ரயான், சிவகுமார், ராணவ் ஆகியோரின் ஆட்டம் எடுபடவில்லை. கோபமே வராமல் இருப்பது ரஞ்சித்தின் உண்மையான இயல்பாக இருக்கலாம். ஆனால் மற்ற குணாதிசயங்கள் கூட அதிகமாக வெளிப்படவில்லை. பெண்கள் அணியில் பவித்ரா, அன்ஷிதா, வர்ஷினி போன்றவர்கள் தொடர்ந்து பின்தங்கியே இருக்கிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் பிரகாசமாக இருந்த ஆனந்தி, தர்ஷிகா போன்றவர்கள் இப்போது மங்கிப் போயிருக்கிறார்கள். மஞ்சரியின் வரவிற்குப் பிறகு ஆனந்தி எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டியிருக்கிறது. தர்ஷிகாவிற்கு அவரது ‘லவ் டிராக்’கே பேக் பயர் ஆகி விடலாம் என்று தோன்றுகிறது.
சாச்சனா மீது பழிபோட்ட பெண்கள் அணி
பிரேக் முடிந்து திரும்பி வந்த விசே “இன்னமும் கொஞ்சம் சீரியஸா போகலாம்” என்று ஷாப்பிங் டாஸ்க்கில் நடந்த குழப்பத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நேற்று சாச்சனாவிற்கு கிடைத்த பலமான அடிக்கு மருந்து போட்டதைப் போல் இன்றைய விசாரணை அமைந்தது. அதிகமான தொகைக்கு ஷாப்பிங் செய்து பெண்கள் அணி சொதப்பியதற்கு முழுக்காரணமும் சாச்சனாதான் என்கிற மாதிரியான பிம்பம் மற்றவர்களால் கட்டமைக்கப்பட்டது.
‘அடிப்படையான மளிகைப் பொருட்களை’ எடுக்க வேண்டியது அன்ஷிதாவின் பொறுப்பு. ‘லக்ஸரி பொருட்களை’ எடுக்க வேண்டியது சாச்சனாவின் பொறுப்பு. இவற்றைக் கணக்கிடுவது ஜாக்குலின் பொறுப்பு. ஆனால் சாச்சனாவின் ஏரியாவிற்குள் நுழைந்த அன்ஷிதாவும் ஜாக்குலினும் எக்ஸ்ட்ராவான லக்ஸரி பொருட்களை தூக்கினார்கள். ஆனால் பிரச்சினை என்று வந்த போது சாச்சனாவின் பக்கம் கை காண்பித்து விட்டார்கள்.
இதற்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் விரித்த வலைதான். “ஷாப்பிங் முடிந்த பிறகுதான் பஸ்ஸர் அடிப்பேன்’ என்று அவர் ஏற்படுத்தித் தந்த வசதிக்குப் பின்னால் ஏதாவது வில்லங்கம் இருக்கலாம் என்று இவர்கள் யோசித்திருக்க வேண்டும். அந்த எக்ஸ்ட்ரா டைம் இவர்களை திசை திருப்பி விட்டது. ஆற அமர சுற்றி வந்து அநாவசியமான பொருட்களையும் தூக்கினார்கள்.
முன்பெல்லாம் மளிகைக் கடைக்குச் சென்று நமக்குத் தேவையான, அவசியமான பொருட்களை மட்டுமே கச்சிதமாகப் பட்டியலிட்டு வாங்குவோம். ஆனால் ஷாப்பிங் மால்கள் பெருகிய பிறகு ‘அந்த ஆஃபர்.. இந்த ஆஃபர்’ என்று தேவையே இல்லாத பொருட்களையும் அள்ளி வருகிறோம். கண்களின் முன்னால் பொருட்கள் கொட்டிக் கிடக்கிற போது நமக்குள் அதிகமான ஆசை பெருகுகிறது. வணிகம் விரித்த வலைக்குள் நன்றாக மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
இதே கதைதான் பிக் பாஸ் விரித்த வலையும். மேலும் ‘ஆறு பாட்டில் ஜாம் பாட்டிலா வாங்குவீர்கள்? விளையாடுகிறீர்களா..’ என்று அவர் கேட்டது ஒரு cue. அதைக் கேட்டதும் சாச்சனாவின் மீது அனைவரும் பாயந்து விட்டார்கள். சவுந்தர்யாவிடம் தந்த விளக்கத்தை அன்ஷிதா சொன்ன குற்றச்சாட்டுக்களின் போது சாச்சனா சொல்லவில்லை என்பதும் ஒரு காரணம்.
சாச்சனா மீது புகார் கூறிய சவுந்தர்யாவும் இந்தப் பிரச்சினைக்கு கூடுதல் காரணம் என்பது இந்த விசாரணையில் தெரிய வந்தது. ‘எக்ஸ்ட்ரா ஜாம் கொண்டு வா’ என்று சொன்னவர்களில் அவரும் ஒருவர். ஆக ஆளாளுக்கு தங்களின் பிழையை மறைத்து விட்டு சாச்சனாவை பலிகடா ஆக்கியதின் நீதி என்னவென்றால், கண்ணால் காண்பதும் பொய். அது ‘டிராஃபிக் ஜாம்’ ஆக இருந்தாலும் பிரச்சினையின் வேர் வேறெங்கோ மறைந்திருக்கலாம்.
ராஜா - ராணி - டம்மியாக இருந்திருக்கக்கூடாது
இதே போல் ஆண்கள் பக்கமும் விசாரணையை நகர்த்தினார் விசே. “நொறுக்குத் தீனிகளை எடுக்க தீபக் அனுமதிக்கவில்லை” என்பது விஷாலின் புகார். “அப்புறம் சோறு கிடைச்சிருக்காது” என்று அழுத்தமாக தீபக் சொன்னதும் விஷாலால் பதில் சொல்ல முடியவில்லை. தீபக் பேச ஆரம்பித்தால் விசே கூட சற்று ரிவர்ஸ் கியர் போட்டு பம்மி விடுகிறார். “இன்னொருத்தருக்கு முந்தி நாம பொருட்களை அள்ளிடணும்னு நெனச்சீங்க.. இல்லையா?” என்று பிரச்சினைக்கான இன்னொரு பரிமாணத்தை எடுத்துரைத்தார் விசே.
அடுத்ததாக, அரியணை டாஸ்க்கில் ராஜா - ராணியும் எப்படி பங்களித்தார்கள் என்பதைப் பற்றிய விசாரணை. இரு தரப்பிலும் தளபதிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது என்பது உண்மை. “ராஜா.. உங்க ரேஞ்சுக்கு நீங்கள்லாம் இறங்கி பேசவே கூடாது” என்று அவர்களை அடக்கி அடக்கியே டம்மியாக்கி விட்டார்கள்.
இது பிக் பாஸ் வீட்டுக்கு மட்டுமல்ல. அதிகாரம் குவிந்திருக்கும் அனைத்து இடங்களிலும் பொருந்தும். அதிகாரத்தின் தலைமையில் உள்ளவர்கள், தங்களைச் சுற்றியுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றவர்களின் பேச்சை மட்டுமே கேட்டு கிணற்றுத்தவளையாக ஆட்சி நடத்தக்கூடாது. மக்களிடம் நேரடியாக அணுகக்கூடிய வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
“நானும் இறங்கி சில விஷயங்களை செய்தேன். சார்.. நிறைய ஐடியாக்கள் தந்தேன்” என்று ராணவ் பலவீனமாக வாதிட்டுப் பார்த்தாலும் மற்றவர்கள் இதை நிராகரித்து விட்டனர். தளபதியும் ராஜகுருவும் ராஜாவை மறைத்து விட்டார்கள் என்பதே பொதுவான புகாராக இருந்தது. தன்னுடைய விளக்கத்தின் போது ‘கலைப்புலி’ பாத்திரத்தை ‘கலைப்புலி தாணு’ என்று ராணவ் தவறுதலாக சொல்லி விட, விசேவே வாய் விட்டு சிரித்து விட்டார்.
அப்போதும் ராணவ் எதையோ சொல்லி சமாளிக்க, அவரை லாஜிக்கலாக மடக்கி முத்து விளக்கம் தந்த காட்சி நன்று. ‘ஒருவழியாக ராணவ் புரிந்து கொண்டார்’ன்னு ஒவ்வொரு முறையும் அறிவிப்பு போட வேண்டியிருக்கே’ என்று விசேவும் சலித்துக் கொண்டார். பாவம், பிறந்த நாளில் ராணவ் எதிர்கொண்ட சோதனை இது.
சாச்சனாவின் சிரிப்பு - விசேவின் கடுப்பு
அடுத்தபடியாக சாச்சம்மா தேவி பற்றிய விசாரணை. சிரித்துக் கொண்டே சாச்சனா சொல்ல கடுப்பாகிப் போனார் விசே. அங்கேயும் இதே கதைதான். தளபதியும் ராஜகுருவும் இணைந்து ராணியை டம்மியாக்கி விட்டார்கள். “ஜாக்குலின்தான் ஒற்றன்றதை கடைசி வரை பெண்கள் கண்டுபிடிக்கலை” என்றார் விசே. சிவக்குமார் ஒற்றனாக நடித்த லட்சணம் பற்றி அருண் அடித்த கமெண்ட்டை ‘இன்னொரு முறை சொல்லுங்க” என்று கேட்டு ரசித்தார் விசே. நேற்று மாதிரியே திட்டு வாங்க வேண்டாம் என்று சாச்சனா நினைத்தாரோ, என்னமோ ‘என் மேலதான் தப்பு. என் பதவியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டேன்’ என்று பின்வாங்கி விட்டார்.
அடுத்ததாக ‘ரோஸ்டிங் டாஸ்க்’ பற்றி ஆரம்பித்த விசே ‘எல்லாத்துலயும் வன்மம் நிறைய இருந்தது. அதப் பத்தி பேசறது வேஸ்ட்” என்று தொடர்ந்து உரையாட மறுத்து விட்டார். “இதை நீங்க Fun-ஆ செய்திருக்கலாம்” என்று விசே கூறிய அறிவுரை நன்று. சம்பந்தப்பட்ட நாளிலும் இதே அம்சம் சொல்லப்பட்டிருந்தது. சவுந்தர்யா குறித்து ஆனந்தி சொன்ன நையாண்டியான குறிப்பு ஒரு நல்ல உதாரணம். ‘பிராவோ’ என்று பிக் பாஸ் அப்போது பாராட்டினார். ஆனால் போட்டியாளர்கள் எக்ஸ்ட்ராவாக வன்மத்தைக் கொட்டியதற்கு பிக் பாஸூம் ஒரு காரணம். ஆனால் இதைப் பற்றி விசே கூட பேச முடியாது.
ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்ட செய்தியை உரையாடலின் இடையில் சொன்னார் விசே. இறுதி வரிசையில் இருந்தவர்கள் ஆனந்தி, ரயான், வர்ஷினி, தர்ஷிகா. இவர்களில் யார் எவிக்ட் ஆவார்கள் என்பதற்கான செட்அப் கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருந்தது. இதற்காக கேடயம், வாள் என்று ஆர்ட் டிபார்ட்மெண்ட் அசத்தியிருந்தது. பிக் பாஸ் சொல்லும் போது நான்கு பேரும் வாளை உருவி உயர்த்தி காட்ட வேண்டும். எதனாலோ வர்ஷினி தயங்கி பிறகு உருவ, அவருடைய வாளில் மட்டும் சிவப்பு நிறம் இருந்தது. எனவே அவர் எவிக்டட் என்று பொருள்.
தான் தப்பித்ததை எண்ணி தர்ஷிகா ஆனந்தக் கண்ணீர் விட, அவருடன் ரொமான்ஸ் குலாவலில் ஈடுபட்டார் விஷால். சற்று திடுக்கிட்டாலும் பிறகு இந்த முடிவை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்ட வர்ஷினி அனைவரிடமும் புன்னகையான முகத்துடன் விடைபெற்றார். அருணுக்கு அவர் நினைவுப்பரிசு தர “வெளில வந்து வாங்கிக்கறேன்’ என்று ஜாக்கிரதையாக அருண் திருப்பிக் கொடுத்து விட்டார். (அப்புறம் யார் ‘அர்ச்சனை’ வாங்கறது?!).
ஒரு புதிய ட்விஸ்ட் - அழிக்கப்பட்ட எல்லைக்கோடு
“கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு. ஆனா நிறைய சந்தோஷம் இருக்கு. அந்த அளவிற்கு அனுபவங்களையும் கற்றலையும் இங்கிருந்து எடுத்துட்டுப் போறேன்” என்று விசேவிடம் சொன்ன வர்ஷினி, பிறகு வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களிடம் பாசிட்டிவ்வாக பேசி விட்டு கிளம்பியது நன்று. “எங்கே தப்பா போச்சு?’ என்று விசே கேட்டதற்கு “மக்கள் வோட்டு போடலை’ என்று வர்ஷினி சொன்னது அவருடைய வெள்ளந்தியான குணத்தைக் காட்டுகிறது. அவர் சரியாக விளையாடியிருந்தால் மக்கள் இத்தனை சீக்கிரம் அனுப்ப மாட்டார்கள். மக்களை விடுங்கள். பிக் பாஸ் அனுப்பியிருக்க மாட்டார்.
வர்ஷினியை வழியனுப்பிய விசே, வீட்டாரிடம் “ஓகே.. ஐம்பது நாள் ஆச்சு.. ஒரு புதிய விஷயத்தை ஆரம்பிப்போம்.. அது என்னன்னு பிக் பாஸ் சொல்லுவார்” என்று சஸ்பென்ஸ் வைத்தார். “சார்.. பர்கர் வேணும்” என்று சாச்சனா பாணியில் ஜாக்குலின் வேண்டுகோள் வைக்க “ஏம்மா.. நான் என்ன ஜொமாட்டோ ஆளா?” என்பது போல் விசே அடித்த கமெண்ட் ரகளையானது. ‘சரி.. பார்க்கலாம்’ என்றபடி பிரேக்கில் சென்றார்.
அதென்ன புதிய விஷயம்? கார்டன் ஏரியாவில் ஒரு பரிசுப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைல்ட் கார்ட் என்ட்ரி யாராவது இருப்பாரோ என்பது முதற்கொண்டு பலரும் என்னெ்னனமோ யூகித்தார்கள். பிறகு சஸ்பென்ஸ் தாங்காமல் பெட்டியைப் பிரித்த போது ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்கிற வாசகம் இருந்தது. சபையைக் கூட்டிய விசே “என்னன்னு புரிஞ்சுதா?” என்று கேட்க “சிங்கம் மாதிரி ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரியா?” என்று மக்கள் கேட்க “ஏன். நீங்களே.. அந்த சிங்கமா இருக்கக்கூடாதா.. வீட்டுக்கு நடுவுல கோடு இல்லியே.. யாராவது கவனிச்சீங்களா?” என்று அவர் கேட்க மக்கள் ஆனந்தப் பரவசம் அடைந்து குதித்தார்கள்.
“என்னது. கோடு இல்லையா.. அப்படியே பழகிடுச்சே சார்.. இனிமே கை கால் நடுங்குமே” என்றார் தீபக், வேடிக்கையாக. “இனிமே டீம் கிடையாது. யாரும் யாரையும் காப்பாத்த வேண்டிய அவசியம் இல்ல. ஒரு லீடர் பின்னாடி பாதுகாப்பா உக்கார முடியாது. சரியா திட்டமிட்டு உழைக்கறவங்களுக்குத்தான் வெற்றியும் பரிசும்” என்று சொல்லப்பட்டதைக் கேட்டு “இப்பவே பரபரன்னு இருக்கு” என்று உற்சாகமானார் முத்து. பிறகு அதிர்ஷ்ட குலுக்கலின் மூலம் அவரவர்களுக்கான படுக்கைகள் ஒதுக்கப்பட்டன. ‘இனிமே என்ன செய்வது?’ என்கிற மாதிரியான கவலையில் ரஞ்சித் அமர்ந்திருந்ததைப் போல் இருந்தது.
“இனிமே தனித்தனி ஆட்டம்.. நாம முன்னாடி நின்னு அவங்களை மறைச்சிட்டோம்ன்னு யாரும் சொல்ல முடியாது. நாம இறங்கி ஆடலாம்” என்கிற உற்சாகத்தை தீபக்கிடம் பகிர்ந்து கொண்டார் முத்து. ராணவ்விற்கு பிறந்த நாள் என்பதால் வீட்டில் இருந்த சாக்லேட்டுக்களை வைத்து ரகசியமாக தயார் செய்து அவரை அழைத்து கொண்டாடினார்கள். பிறகு நடந்த ‘ Birthday Bumps’ என்கிற சமாசாரம் வேடிக்கையாகத் தெரிந்தாலும் சமயங்களில் ஆபத்தாக முடியக்கூடியது. வழக்கமாக போட்டியாளர்களுக்கு பிறந்தநாள் என்றால் பிக் பாஸ் தரப்பில் இருந்து கேக் வரும். இந்த முறை அவர் சிக்கனமானவராக மாறி விட்டாரா?
எல்லைக்கோடு அழிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆடியாக வேண்டும் என்கிற நெருக்கடி ஆட்டத்திற்கு ஒரு புதிய உற்சாகத்தையும் சுவாரசியத்தையும் கொண்டு வரலாம். வரும் என்று நம்புவோம்.