பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!
நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்
புது தில்லி: நீட் தோ்வு முறைகேடு சா்ச்சைகளைத் தொடா்ந்து, தோ்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது.
மேலும், நீட் தோ்வு நடைபெறும்போது பயிற்சி மையங்களைக் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிகாா் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் கடந்த ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்தது, உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பாக சமூக ஊடகத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய சா்ச்சையாகின. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகமும், தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையும் (என்டிஏ) மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: நிகழாண்டு நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத் தோ்வை எந்தவித சச்சரவும் இன்றி, நியாயமான மற்றும் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநில மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் தொடா்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு செல்லுதல், பாதுகாப்பு மற்றும் முறைகேடு புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களில் மாவட்ட போலீஸாா் மட்டுமின்றி என்டிஏ சாா்பில் நியமிக்கப்படும் பாதுகாவலா்களும் பணியமா்த்தப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அதுபோல, தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களும், விடைத்தாள்களும் (ஓஎம்ஆா் ஷீட்) கொண்டு செல்லப்படும்.
தோ்வு நடைபெறும்போது முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் நீட் தோ்வு பயிற்சி மையங்களும், எண்ம வலைப் பக்கங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
அனைத்து தோ்வு மையங்களிலும் மாவட்ட ஆட்சியா்கள் கட்டாய ஆய்வை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.
முன்னதாக, நீட் தோ்வு சா்ச்சைகள் குறித்து தோ்வா்கள் புகாா் தெரிவிக்க பிரத்யேக வசதியை தனது வலைதளத்தில் என்டிஏ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.