குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு
நெருப்பில் குளிக்கும் தெய்வம்... காந்தாரா சாப்டர் - 1 திரை விமர்சனம்!
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா சாப்டர் - 1 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காந்தாராவில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரம் இறுதியாக ஓரிடத்தில் சுற்றியபடி காணாமல் போகும். அந்த இடத்திலிருந்தே காந்தாரா சாப்டர் - 1 கதை துவங்குகிறது. ஏன் நம் முன்னோர்கள் இந்த இடத்திலேயே மறைகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் காந்தாரா மலைப் பகுதியில் ஈஸ்வர பூந்தோட்டம் என்கிற இடத்தில் ஒரு பழங்குடியின சமூகம் வசித்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மகத்துவத்தை அறிந்த பாந்தோரா மன்னன் ஈஸ்வர தோட்டத்திற்கு படையுடன் சென்று அதனைக் கைப்பற்ற நினைக்கிறான்.
ஆனால், தெய்வ சக்தி மன்னனின் ஆசைகளையும் அவனையும் அழிக்கிறது. மன்னனின் மகன் மட்டும் அங்கிருந்து தப்பிச்செல்கிறார். ஆண்டுகள் கடக்கின்றன. மீண்டும் ஈஸ்வர பூந்தோட்டத்தின் மீது மன்னர் குடும்பத்துக்கு ஆசை எழுகிறது. அவர்கள் அமானுஷ்யங்கள் நிறைந்த காந்தாரா காட்டிற்குள் சென்றார்களா? ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைந்தார்களா? என்கிற கதையைப் புராண நம்பிக்கைகள் மூலம் சொல்லியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
நம்முடைய புராணக் கதைகளுக்கென நீண்ட செவிவழிக் கதைகள் உள்ளன. ஆழம் செல்ல, செல்ல ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும் பண்பாடுகளுடன் கூடிய மத நம்பிக்கைகள், வழிபாட்டு நெறிகள், நெருப்பின் மீதான அச்சம் என காந்தாரா சாப்டர்- 1 கதை மிக கவனமாக எழுதப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் வாழ்க்கையைக் குருட்டுத்தனமாக முன்வைக்காமல் ரிஷப் ஷெட்டி தொன்மக் கதையை நவீன சினிமா மொழிக்கு அசாதாரணமாகக் கடத்தியிருக்கிறார்.
காந்தாராவில் நிலவுரிமை பேசப்பட்டதுபோல் காந்தாரா சாப்டர் - 1 இல் நிலத்தின் ஆன்மா யாரிடம் இருந்தது என்பதைப் பேசியிருக்கிறார். பூமியில் அநியாயம் நடக்கும்போதெல்லாம் தெய்வம் மனித உருவெடுக்கும் என்கிற கதையில் தெய்வத்தையும் வீழ்த்தும் தருணங்களும் எழுதபட்டிருக்கிறது.
திரைக்கதையில் ஒவ்வொரு இரவிலும் இப்படத்தின் கதைக்கான அடுத்தக்கட்ட பாய்ச்சல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இரவும் நெருப்பும் பழங்குடியினரின் வாழ்வில் மிக முக்கியமானது. இந்த இரண்டையும் படிமம்போல் காந்தாரா உலகிற்குள் கச்சிதமாக பொருத்தியிருக்கிறார் ரிஷப். அவர்களின் இறை வேண்டுதலை துளு மொழியிலேயே பேச வைத்தது நல்ல முடிவு. அதன் வசன உச்சரிப்பே கதையில் தெய்வம் இருக்கிறது என்கிற நம்பகத்தன்மையை உருவாக்குகிறது.
படத்தின் முதல்பாதி மலையையும் மக்களையும் காட்டி அந்த உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அதாவது காட்டிற்குள் செல்லும் நிதானத்துடன். நல்ல இடைவேளைக் காட்சியிலிருந்து இரண்டாம் பாகம் பரபரப்பாகச் செல்ல இறுதி 20 நிமிடங்கள் ரிஷப்பின் நடிப்புடன் ஒளிப்பதிவு, இசை, விஎஃப்எக்ஸ் ஆகியவை உயிர்பெற்று ‘திரைத் தீப்பிடிக்கும்’ அளவிற்கு ருத்ர தாண்டவமே நடக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு கிளைமேக்ஸ்தான் காரணமாக இருக்கும்.
நடிப்பிலும் இயக்கத்திலும் ரிஷப் ஷெட்டி மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் பெர்மே என்கிற கதாபாத்திரத்தில் காட்டிற்குள் இருக்கும் பழங்குடியாக, காட்டிற்கு வெளியே மன்னனின் நிலத்தில் வியாபாரியாக என உடல்மொழிகளை நிலத்தின் சூழலுக்கு ஏற்ப நன்றாக மாற்றுகிறார். மேலும், பஞ்சுருளி தெய்வம் உடலுக்குள் வந்ததும் ‘ஓ..’ என ரிஷப் கத்தும்போது அவர் வெறும் நடிகராகத் தெரியவில்லை என்பதுதான் காந்தாராவின் ஆன்மா. காந்தாராவுக்காக ரிஷப் தேசிய விருது வாங்கினார். இப்படத்திற்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ருக்மணி வசந்த் அழகில் மிளர்கிறார். இவரின் கதாபாத்திரமும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. மன்னராக நடித்த ஜெயராம், அவரின் மகனாக நடித்த குல்ஷன் தேவய்யா என பலரும் தங்களுக்கான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தின் கதை அழுத்தமாக இருந்தாலும் சில திரைக்கதை தொய்வுகளால் முழுமையை நோக்கி நகரவில்லை. ஈஸ்வரப் பூந்தோட்டம் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அங்குள்ள கிணறுக்குள் ரிஷப் ஷெட்டி சென்றதும் ஒரு சண்டைக்காட்சி நடக்கிறது. அது கொஞ்சம் ஓவராக இருக்கிறதோ என எண்ண வைத்துவிட்டது. இக்கதை ஆரம்பிக்கும்போதே புராணக் கதைதான் சொல்லப்படுகிறது. அதனால், நிறைய புனைவு சுதந்திரத்தை ரிஷப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அதுவே நமக்கு சோர்வையும் அளிக்கிறது. இரண்டாம் பாதியில் குல்ஷன் கதாபாத்திரம் நன்றாக வந்துகொண்டிருக்க, சப்பென முடித்து வைத்தது குறைதான். அவரைக் கிளைமேக்ஸ் வரை கொண்டு சென்றிருக்கலாம்.
ஒரு நல்ல சினிமாவுக்கு அடையாளமே அதன் கூட்டுழைப்பு தனித்தனியாகத் தெரிவதுதான். ’24 கிராஃப்ட்ஸ்’ என்கிற அனைத்து துறைகளும் மிகச்சிறந்த பங்களிப்பைக் கொடுத்தால் மட்டுமே ஒரு திரைப்படத்தின் தரம் அதிகரிக்கும். காந்தாரா சாப்டர் - 1 தொழில்நுட்ப ரீதியாக பல உச்சங்களைத் தொட்டிருக்கிறது. புலி, தேவாங்கு உள்ளிட்ட விலங்குகளை விஎஃப்எக்ஸ் மூலம் மிகத் தத்ரூபமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளனர். இடைவேளைக் காட்சியில் புலியும் ரிஷப்பும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி இந்திய சினிமாவிலும் மிகச்சிறந்த கனவுகள் கொண்ட படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று. இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், கலை இயக்குநர் பங்கலான் உள்ளிட்டோர் தாங்கள் இந்தியாவின் சிறந்த கலைஞர்கள் என்பதை நிரூபிக்கின்றனர்.
அஜனீஷ் லோக்நாத் சரக்குள்ள பெரிய திறமைசாளி. இப்படத்தில் உணர்வுப்பூர்வமான பின்னணி இசைகளையும் மென்மையான பாடல்களையும் கொடுத்திருக்கிறார். ருக்மணி அரண்மனையில் வீணையில் ஒலிக்கப்படும் இசைத்துணுக்குள் நம்மை அக்காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. இனி பான் இந்திய பிரம்மாண்ட படங்களின் இசை வாய்ப்பு இவரையே நாடும். இந்திய சினிமாவின் புதிய சென்சேஷன்.
அரவிந்த்தின் ஒளிப்பதிவில் காட்டின் அழகும் ஆபத்தும் உயிர்ப்புடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விழித்திரையைவிட்டு அகலாத மிகச்சிறந்த ஒளியமைப்புகள். தேர் சண்டையைப் படமாக்கிய விதம், குல்ஷன் ஈஸ்வரத் தோட்டத்திற்குள் செல்லும் காட்சி, கிளைமேக்ஸ் போர்க்காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டிவிட்டார். தேசிய விருதுக்குத் தகுதியானவர்.
இப்படம் ஆஸ்கருக்குச் செல்வதாக இருந்தால் தாராளமாக கலை இயக்குநரை பரிந்துரை செய்யலாம். வசதியான செட்களை அமைத்து சுலபமாக ரசிகர்களை ஏமாற்றும் வாய்ப்பிருந்தும், இப்படத்தில் மலைப்பகுதியில் சாய்வாகவே பல செட்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, ராஜாவின் அரண்மனை (கோட்டை அல்ல) அழகிலும் உண்மைத்தன்மையிலும் அபாரமாக இருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிறந்த செட் பணிகளில் காந்தாரா - 2 க்கும் சிறந்த இடமுண்டு. வாழ்த்துகள் பங்கலான்.

காந்தாரா திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக மாறும் என ரிஷப் ஷெட்டியே நினைத்திருக்க மாட்டார். ஆனால், முதல் பாகம் கொடுத்த தைரியத்தை வைத்து இந்தியாவின் மிகச்சிறந்த மேக்கிங்குடன் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதுவே, இதுவரை வெளியான பான் இந்திய சினிமாக்களில் உருவாக்க ரீதியாக முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.
அனைத்து வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் காட்சியமைப்புகள் இருப்பதால் வணிக ரீதியாகவும் பல சாதனைகளைச் செய்யும் என்றே தெரிகிறது. கன்னட சினிமாவின் தலையெழுத்தை காந்தாரா சாப்டர் - 1 மாற்றிவிட்டது. இனியொரு காந்தாரா வருமா எனத் தெரியாது. ஆனால், அங்கு பல திறமைசாளிகள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. காந்தாரா சாப்டர் - 1 மேக்கிங் ரீதியாக இந்திய சினிமாவில் புதிய மைல்கல்!
இதையும் படிக்க: சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்