திருவண்ணாமலையை உலுக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 2 காவலர்களும் ...
`இதுதான் கெத்தா?' பெண்களை ஆபாசமாக பேசும் உரிமையை யார் கொடுத்தது உங்களுக்கு? ஓர் ஆதங்கப் பதிவு
கெட்ட வார்த்தை பேசுவது அதிகமாகிவிட்டது. அதிலும் பெண்களை நோக்கி கெட்ட வார்த்தை பேசுவது முன் எப்போதையும்விட இப்போது அதிகமாகியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக, ஏதோவொரு வகையில் சமூக வலைதளங்களில் புழங்குகிற பெண்களையும், திடீரென சமூக வலைதள டிரெண்டிங்குக்குள் சிக்கிக் கொள்கிற பெண்களையும், 'ஆயிரம் பீப் சவுண்ட் போடலாம்' என்கிற அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் கமென்ட் செய்கிறார்கள்.

அந்தப் பெண்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கிற அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, ஒரு கும்மிப்பாட்டில் பிரபலமான பெண்ணாக இருந்தாலும் சரி, விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் குழந்தையை பறிகொடுத்த பெண்ணாக இருந்தாலும் சரி... நீங்கள் பெண்ணாக இருப்பது மட்டுமே, நாங்கள் ஆபாசமாக பேசுவதற்கு போதுமான காரணம் என்று முடிவெடுத்து விட்டார்கள்போல...
’எனக்கு இன்று பிறந்த நாள்; ஐம்பதைத் தொட்டுவிட்டேன்’ என்கிற பெண்ணின் போஸ்ட்டில் ‘நீ கிழவியா டி’ என்று ஆரம்பித்து ஓர் ஆபாச வார்த்தையுடன் பின்னூட்டம் இடுகிறார்கள்.
மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதி ஒருவரின் புகைப்படத்தின் கீழ், வயது வித்தியாசமில்லாமல் வார்த்தைகளாலேயே பாலியல் வன்முறை செய்கிறார்கள்.

தமிழகத்தின் மூத்த மகப்பேறு மருத்துவர் ஒருவருடைய வீடியோவின் பின்னூட்டத்தில் ’போடி தே... மு...’ என்று கமென்ட் செய்கிறார் ஒருவர். இவருடைய இந்த கமென்ட்டுக்கு இன்னொருவர் ’ஏன்டா மாப்பிள்ளை இப்படி கமென்ட் போட்டு இருக்க’ என்று விசாரிக்க ’சும்மா தான்டா’ என்று அதற்கு ரிப்ளை செய்கிறார். தன் நேரத்தை செலவழித்து இந்த ஆண்களுடைய வீட்டுப் பெண்களுக்கும் விழிப்புணர்வு தந்துகொண்டிருந்த அந்தப்பெண் மருத்துவரின் தரம் என்ன, தகுதி என்ன, அவர் அனுபவம் என்ன, அவர் இதுவரை எத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் என எதுவும் தெரியாத அவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் மட்டும் நன்றாகத் தெரிகிறது.
கரூர் பரப்புரைக்கு குழந்தைகளுடன் சென்ற பெண்களை, பரப்புரை செய்ய வந்தவரின் படுக்கையறை வரைக்கும் வார்த்தைகளாலேயே இழுத்துச் செல்கிறார்கள் பலர். அந்தப் பெண்களுக்காக வாதாடுகிறோம் என, இவர்களுடைய அம்மாக்களையும், அக்கா, தங்கைகளையும் பின்னூட்டங்கள் வழியே தங்களுடைய படுக்கையறை வரைக்கும் இழுத்து செல்கிறார்கள் இன்னும் பலர்.
கெட்ட வார்த்தை பேசுவதை கெத்து என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எக்காலத்திலும் உண்டு. எங்கோ ஒருசிலரிடம் இருந்த அந்த துர்இயல்பு இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் இருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் அசூயையும் ஏற்படுத்துகிறது. அதுவும் சமூக வலைதளங்களில் அது எந்தவித தயக்கமுமின்றி வீசப்படுகிறது
கரூர் துயரத்தையடுத்து களத்துக்குச் சென்று விசாரணை நடத்திவிட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார் மரியாதைக்குரிய பெண்மணி ஒருவர். அந்த வீடியோவின் பின்னூட்டத்தில் ’யாரடி நீ’ என ஒருமையில் ஆரம்பித்து தங்களுக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த மரியாதைக்குரிய பெண்மணி ஒரு முன்னாள் நீதியரசர் என்பது தெரியாதவர்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் அவருக்கு பணித்த வேலையை அவர் செய்கிறார் என்பதும் தெரியாதவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் மட்டும் நன்கு தெரிகிறது.
எங்களுக்குப் பிடித்த நடிகருக்கு நாங்கள் பால் அபிஷேகம் செய்வோம்; பீர் அபிஷேகம் செய்வோம். ஆனால், ஒரு பெண் பொதுவெளியில் அந்த நடிகரின் ரசிகை நான் என்று பேசி வைத்தால், அவளுடைய ஒழுக்கத்தையும் உடலையும் பின்னூட்டங்களில் விமர்சனம் செய்தே தீருவோம் என்று முன்முடிவுடன் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் உங்கள் சுயமரியாதைக்கு தருகிற முக்கியத்துவத்தைவிட பால் அபிஷேகத்துக்கு தருகிற அதே முக்கியத்துவத்தைத்தான் அந்தப் பெண்களும் தந்து கொண்டிருக்கிறார்கள். இது புரிந்தால், உங்கள் குற்றம் சாட்டுகிற கரங்களின் நான்கு விரல்கள் உங்களை நோக்கி இருப்பது புரியும். ஆனால், இது புரிபடும் அளவுக்கு நீங்கள் பக்குவப்பட்டிருக்கிறீர்களா என்பதுதான் இன்றைக்கு இருக்கிற அச்சத்துக்குரிய கேள்வி..?

சிகரெட், மது போல கெட்ட வார்த்தை பேசுவதும் தவறு என்கிற காலம் ஒன்றும் நம் சமூகத்தில் இருந்தது. பெண்களையும், வயதில் மூத்தவர்களையும் கண்டால் கையில் இருக்கிற புகையை மறைப்பதுபோல இவர்கள் முன்னால் கெட்டவார்த்தை பேசுவதும் தவறு என்கிற காலமும் இருந்தது. தாங்கமுடியாத உடல் உபாதை காரணமாகவோ அல்லது மன வேதனை காரணமாகவோ, அதன் வெளிப்பாடாக சிலர் கெட்ட வார்த்தைகள் பேசுவதுண்டு. இவர்களிலும் பலர் அதிகபட்சமாக ரோமத்தை குறிக்கும் வார்த்தையுடன் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். ஒரு சிலர் ஆபாசமாக கெட்ட வார்த்தைகள் பேசினாலும், அவர்களை அதட்டவும் அடக்கவும் அவரைச் சேர்ந்தவர்களே சிலர் இருப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளமெங்கும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன.
கெட்ட வார்த்தை பேசுவதை கெத்து என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எக்காலத்திலும் உண்டு. எங்கோ ஒருசிலரிடம் இருந்த அந்த துர்இயல்பு இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் இருப்பது தாங்கமுடியாத அதிர்ச்சியையும் அசூயையும் ஏற்படுத்துகிறது. ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சி என்பது, சக மனிதனுக்கு தன்னிடமிருந்து தர ஒவ்வாத அசிங்கங்களை ஒவ்வொன்றாக உதிர்ப்பதுதானே... அதைவிடுத்து முந்தைய தலைமுறையைவிட இளம் தலைமுறையினர் ஆபாச வார்த்தைகளை அதிகம் பேசுவதென்பது, அவர்கள் நாகரீகத்தில் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது.
இரு ஆண்களுக்கிடையே பிரச்னை என்றால், எதிர்தரப்பு ஆணுடைய குடும்பத்துப் பெண்களை வார்த்தைகளால் மானபங்கபடுத்துகிற வழக்கம், இன்றைய சோஷியல் மீடியாக்களிலும் தொடர்கிறது என்றால், உங்கள் வளர்ச்சி அடுத்தவர் உருவாக்கிக் கொடுத்த டெக்னாலஜியில் மட்டும்தான்; உங்கள் சொந்த மூளையில் அல்ல என்று எடுத்துக்கொள்ளலாமா..?
இது ஜனநாயக நாடுதான். அனைவருக்கும் பேச்சுரிமை உண்டுதான். ஆனால், அடுத்தவரை ஆபாசமாக பேசும் உரிமை யாருக்கும் கிடையாது. ’பேசுவேன்; அது என் உரிமை’ என்பவர்கள் உங்கள் ஆபாச குப்பைகளை உங்கள் வீட்டுக்குள்ளேயே கொட்டிவிட்டு பொதுவெளிக்கோ, சமூக வலைதளங்களுக்கோ வாருங்கள்.
இன்னும், ’யாருங்கடி நீங்க... தே.... மு....களா’ என்பீர்களென்றால், சட்டம் 3 மாதம் முதல் 3 வருடங்கள் வரைக்கும் சிறைத்தண்டனை தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.