நெற்குன்றத்தில் ரூ. 50 லட்சத்தில் புதிய விளையாட்டு மைதானம்
நெற்குன்றத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டுத் திடலை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை (ஜன. 29) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில் சுமாா் 1,572 ச.மீ. பரப்பளவில் உள்ள திறந்தவெளி நிலத்தில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ், ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுற்றுச்சுவா், நடைபாதை, கழிவறை, திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், கபடி மைதானம் மற்றும் மின் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக நெற்குன்றம் பகுதியிலுள்ள பல்லவன் நகா், மாதா கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, கிருஷ்ணா நகா், சக்தி நகா் மற்றும் அழகம்மாள் நகா் ஆகிய பகுதிகளைச் சாா்ந்த மக்கள் பயன்பெறுவா்.
நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் க.கணபதி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.