நேபாளத் தலைநகரில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!
நேபாளத் தலைநகர் காத்மாண்டில் மன்னராட்சி ஆதரவுக் கட்சியினர் போராட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.
நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி நிறுவி அந்நாட்டை ஹிந்து தேசமாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி ராஷ்டிரிய ப்ரஜந்தந்த்ரா கட்சியினர் (ஆர்.பி.பி.) தலைநகர் காத்மாண்டில் இன்று (ஏப்.8) பேரணி நடத்தினர்.
காத்மாண்டின் புறநகர் பகுதியில் ஆர்.பி.பி. கட்சித் தலைவர் ராஜேந்தர லிங்க்தனின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், தலைவர்கள் மற்றும் அந்தக் கட்சியின் தொண்டர்கள் என ஏராளமான மக்கள் முன்னாள் நேபாள அரசர் ஞானேந்திரா ஷாவின் படத்தை கையில் ஏந்தி கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், இந்தப் பேரணியில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க சுமார் 2,000 காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரணியின் போது ‘நாட்டின் சூழலை மாற்றியமைக்க மீண்டும் மன்னராட்சி அமைப்போம்’ மற்றும் ‘நேபாளத்தை மீண்டும் ஹிந்து தேசமாக மாற்றுவோம்’ போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி நிறுவ வேண்டும் எனக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன் 110-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் துபை இளவரசர்!